ministers afraid of adityanath orders

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் அரசு நிர்வாகம் திறமையாகவும், வெளிப்படையாகவும் இருப்பதற்காக பிறப்பித்த உத்தரவால், அமைச்சர்களே ஆடிப்போய் உள்ளனர்.

புதிய விதிமுறைகளைக் கேட்டு அமைச்சர் பதவி வகித்து வருபவர்கள் பதவி வேண்டுமா? என்றும், புதிய அமைச்சராக பொறுப்பு ஏற்பவர்களும் தயங்கி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கோரக்பூர் தொகுதி எம்.பி. யோகி ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றுள்ளார். இவரின் வருகைக்கு பின், மாநிலத்தில் நிர்வாக நிலைமையை தலைகீழாக மாறிவிட்டது.

அரசு அதிகாரிகளுக்கு ஒழுக்க நெறிகள், பெண்களின் பாதுகாப்புக்கு ஆன்ட்டி ரோமியோ படை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, மின் கட்டண சலுகை என பல அதிரடியான திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இதற்கிடையே முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றபோது, அடுத்த 15 நாட்களுக்குள் அமைச்சர்கள் தங்களின் சொத்து விவரங்களை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவிட்டு இருந்தார்.

இதற்கிடையே தனது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டி சில விதிமுறைகளை வகுத்து அதை பின்பற்றுமாறு முதல்வர் ஆதித்தயநாத்உத்தரவிட்டுள்ளார். அவை பின்வருவன.

1. ஏதாவது தனியார் நிறுவனத்துடன் கூட்டு வைத்து இருக்கிறார்களா?, பங்குகள் ஏதும் வைத்து இருக்கிறார்களா? என அமைச்சர்கள் தெரிவிக்க வேண்டும்.

2. அமைச்சர்களாக பதவி ஏற்கும் முன், இதற்கு முன் செய்து கொண்டு இருந்த தொழில், அதில் கிடைத்த வருமானம், சொத்துக்கள் மதிப்பை தெரிவிக்க வேண்டும்.

3. அரசு ஒப்பந்தங்கள், கட்டுமானங்களில் உறவினர்கள் ஏதேனும் பணி செய்து வந்தால், அவர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும்.

4. அமைச்சர்கள் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, தனியாக ஏதாவது வர்த்தகம், தொழில் நடத்தவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும்.

5. ஆடம்பரமான செலவுகளையும், பேனர், தோரணங்கள், போஸ்டர்கள் அடிப்பதை நிறுத்த வேண்டும்.

6. அமைச்சர்களுக்கு விழாக்களில் பங்கேற்கும் போது ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பரிசுகள் கிடைததால், அதை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்.

7. அரசு வேலையாக சுற்றுப்பயணம் செல்லும் அமைச்சர்கள் தனியார் ஓட்டல்களில் தங்காமல், அரசு விடுதிகளில் மட்டுமே தங்க வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகளை அமைச்சர்களுக்கு முதல்வர் ஆதித்யநாத் விதித்துள்ளதால் அவர்கள் கலங்கிப்போய் உள்ளனர்.