தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜாவாக இருப்பார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூஜாவா இருப்பார் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சனம் செய்துள்ளார். 

விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவு கேட்டும் சாத்தூர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் ஆதரிக்க கோரியும் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சசிகலாவை துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், தேர்தல் பிரசாரத்தில் சசிகலா பெயரையே பயன்படுத்தவில்லை. சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டு வர தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை. மேலும் கட்சியுனரை ஏமாற்றி அரசியல் செய்து வருகிறார் என குற்றம்சாட்டியுள்ளார். 

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ் தான். மேலும் உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வேண்டும் என்று வாதாடியது நளினி சிதம்பரம் தான் என்றும், ஸ்டாலின் இதில் நாடகம் போடுகிறார் என்றும் கூறினார். மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லையென்றால் ஒரு பேச்சு. தேர்தல் முடிவுகள் வெளியானதும் எடப்பாடி பழனிச்சாமி ராஜாவாக இருப்பார், ஸ்டாலின் கூஜாவாக இருப்பார். 

தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தினகரன் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றும் கடைசியில் தினகரன் பணநாயகம் வென்றது என்று கூறிவிட்டு செல்வார் என்று அவர் கூறினார். 40 மக்களவை தொகுதி மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். மக்கள் அலை அரசுக்கு எதிராக இல்லை. இந்த அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.