ஜெயலலிதா முதலமைச்சரா இருந்த வரை அமைச்சர்கள் எந்தவிதமான ஆரவாரமும் இன்றி அமைதியாக இருந்தார்கள் அவரது முன்பு முதுகு வளைய நின்றுதான் பேசுவார்கள். பத்திரிக்கையாள்களைக் கண்டால் காத தூரம் தெறித்து ஓடுவார்கள்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அனைத்து அமைச்சர்களும் தங்களது இஷ்டப்படி கருத்து தெரிவிப்பதும், பேட்டி அளிப்பதும் அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது.

தமிழக பத்திரப் பதிவுத்  துறை அமைச்சர் கே.சி.வீரமணி,  வேலூரில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, தாய் 8 அடி பாய்ந்தால்  குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழிக்கேற்ப, மறைந்த  முதலமைச்சர்  ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என தெரிவித்தார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது பொது மக்கள் அது வேண்டும், இது வேண்டும் என கோரிக்கை வைப்பார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பின்பு பொது மக்கள் கோரிக்கை வைக்காமலேயே அவர்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாக தெரிவித்தார்.


அதிமுக – பாமக கூட்டணி குறித்து திமுகவினர் கண்டபடி பேசி வருகிறார்கள், ஏன் பாஜக, பாமகவுடன் திமுக கூட்டணி வைத்துக் கொண்டதில்லையா ? இதைப் போலத்தான் நாங்களும் கூட்டணி வைத்துள்ளோம் என்றார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் ஏழை-எளிய மக்களுக்காக போராடி வருபவர், இட ஒதுக்கீட்டுக்கா போராடியவர் ஆகவே அவருடன் கூட்டணி வைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று வீரணி பேசினார். 

பாஜக, பாமகவுடன் கூட்டணி வைப்பதை கடுமையாக எதிர்த்தவர் அமைச்சர் வீரமணி. ஆனால் அண்மையில் அவரது வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டுக்குப்  பிறகு, ஜெயலலிதாவையே மறக்குமளவுக்கு பேசி வருகிறார் என அதிமுக தொண்டர்க்ள சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.