நான் அதிர்ஷ்டத்தால் வந்தேன் என்றால், கடந்த சட்டமன்ற தேர்தலில் அம்மாவைத் தவிர மீதமுள்ள 233 பேருமே அதிர்ஷ்டத்தால் வந்தவர்கள்தான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்துக்கு எம்.எல்.ஏ. கருணாஸ் பதிலடி கொடுத்துள்ளார். திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ், அண்மையில் சென்னையில் நடந்த முக்குலத்தோர் புலிப்படை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் பற்றியும், காவல் துறை பற்றியும் கடும் வார்த்தைகளால் பேசியிருந்தார். 

அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. கருணாஸ் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர், கருணாஸ் ஜாமினில் வெளியே வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை, செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஹெச்.ராஜா, காவல் துறை மற்றும் 
நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவந்தனர். 

இதனிடையே, சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது எம்.எல்.ஏ.கருணாஸ் பேசும்போது முதலமைச்சர், காவல் துறை குறித்து அவதூறாக பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. கருணாஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். எம்.எல்.ஏ. கருணாஸ், கைதுக்கு கண்டனம் தெரிவித்தவர்கள், ஹெச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், இது குறித்து செய்தியாளர் கேள்வி ஒன்றை எழுப்பினார். 

அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 29 மாநிலங்களில் 19 மாநிலங்களை தன் ஆளுகைக்கீழ் கொண்டு வந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் ஆளுகையின்கீழ் கொண்டு வருகிற கொள்கையோடு லட்சியத்தோடு இருக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி தலைமையில்  இன்றைக்கு இயங்குகிற, இந்த தேசத்திற்காக உழைத்த இயக்கத்தினுடைய பொது செயலாளராக இருப்பவர் ஹெச்.ராஜா. அவர் இந்த இடத்துக்கு வர எத்தனை உழைப்புகள்... தியாகங்கள் இந்த நாட்டுக்காக செய்திருப்பார்... அப்படி உள்ள ஒருவரை கையாளுகிற விதமோ, நேற்று ஒரு இயக்கத்தை தொடங்கிவிட்டு, அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ.வாகி இன்றைக்கு அதிர்ஷ்டத்தை தொலைத்துவிட்டு, தற்போது அங்கீகாரம் இன்றி மீடியா விளம்பரத்துக்காக கருணாஸ் உளறுகிறார். 

கருணாசையும், ஹெச்.ராஜாவையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்று கடுமையாக கூறியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சு குறித்து, எம்.எல்.ஏ. கருணாசிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நான் அதிர்ஷ்டத்தில் வந்தேன் என்றால், கடந்த சட்டமன்ற தேர்தலில் 234 சட்டமன்ற உறுப்பினர்களில் அம்மாவைத் தவிர மீதமுள்ள 233 பேருமே அதிர்ஷ்டத்தால் வந்தவர்கள்தான் என்றார். அம்மா, யார் யாரை அடையாளம் காட்டினார்களோ அவர்களே எம்.எல்.ஏ.,வாகவும், எம்.பி.யாகவும், அமைச்சர்களாகவும் ஆனது என்பதுதான் நிஜம். 

அந்த அடிப்படையில் கருணாஸ், கஷ்டப்பட்டாரு... லாட்ஜில் தங்கியிருந்தாரு... எம்.எல்.ஏ. ஆஸ்டலில் படுத்திருந்தாரு... என்று ஒரு அமைச்சர் சொல்கிறார் என்றால் அதைநான் மறுக்கவில்லை. சட்டமன்றத்தில் நான் கூறியத்தாத்தான் அவர் சொல்கிறார். மெரினா கடற்கரையில் ஜட்டியுடன் உட்கார்ந்து கொண்டு, துணிகளை காயப்போட்ட பின் மீண்டும் அணிந்து வேலை தேடிப்போன காலங்கள் எல்லாம் சென்னையில் உண்டு. அதை எதையும் நான் மறுக்கவில்லை. நான் பெரிய பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தேன் என்று நான் கூறவில்லை. ஆனால் நான் உழைப்பால் வந்தவன் என்று எம்.எல்.ஏ. கருணாஸ் கூறியுள்ளார்.