ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றி திருவாரூர், திருப்பரங்குன்றத்திலும் தொடரும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அண்மையில் திருவண்ணாமலையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால், வீட்டில் உள்ள வில்லன் டி.டி.வி.தினகரன் என விமர்சித்தார். அவர்களிடம் கட்சியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினார். 

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன் ஆர்.பி.உதயகுமார் ஒரு காமெடி நடிகர் என்று விமர்சனம் செய்துள்ளார். எனது போட்டோவையும், அவரது போட்டோ வையும் வைத்து ஒப்பிட்டு பாருங்கள். இதில் யார் முகம் வில்லன் மாதிரி இருக்கிறது என்று தெரியும். மேலும் அ.தி.மு.க.வினர் எங்களை வில்லன் என்று கூறும் போது எப்படி நாங்கள் அவர்களுடன் பேசமுடியும். அவர்கள் யாரும் எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று கூறினார். 

அமித்ஷா பங்கேற்கவில்லை என்பதற்காக ஸ்டாலின் விரக்தியில் உச்சத்தில் பேசியுள்ளார். அறிவித்த நேரத்தில் பணமதிப்பு நீக்கம் புரட்சிகரமாக இருந்தாலும், இந்தியாவை முடக்கிவிட்டது என்று கருத்து தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் வரும் போது கூட்டணி என்பது தெரியவரும். எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். வருகின்றன நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.