தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய அமைச்சர் தங்கமணி இந்த ஆண்டும் தட்கல் முறையில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் என கூறினார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தமிழகத்தில் காப்பருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என கூறிய தங்கமணி, இதனால் மின்சார வாரியத்தில் கோளாறுகளை சரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்தார். அதே நேரத்தில்  காப்பர் தட்டுப்பாட்டைப் போக்க மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளோம் எனவும் கூறினார்.

சென்னையில் தற்போது இரவு நேரங்களில் மின் அழுத்தம் குறைவாக உள்ளது. சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மின் தேவை 3,700 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை பாரிமுனைப் பகுதியில் ஒரு மாதத்துக்குள் புதிய துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படும் எனவும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புதை வட மின்கம்பிகளை பொருத்தும் பணி தொடங்கி தற்போது நடைபெற்று வருவதாகவும்  அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.