தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயுத்துறை அமைச்சருமான தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் திணறி வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,18,594 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 1650ஆக உயர்ந்துள்ளது.

முக்கியமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் வாதிகள் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உடனான ஆலோசனையில் பங்கேற்பதாக இருந்த நிலையில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, நாமக்கல்லில் உள்ள தங்கமணியின் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன், பழனி, குமரகுரு உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் திமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அடுத்தடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடை செய்துள்ளது.