டிடிவி. தினகரன் தவிர அனைவரும் அதிமுகவில் சேரலாம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்துடன் நேற்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது;- செம்மரக்கடத்தலை தடுக்க தமிழக - ஆந்திர மாநில போலீசார் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றனர். அதிகளவில் செம்மரங்களை வெட்டுவதற்காக தமிழகத்தில் இருந்து வருவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. 

தமிழகத்தில் 20 கிலோ வரை இலவச அரிசி போன்ற சிறந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உணவு பஞ்சமே இல்லை. எனவே அவர்கள் எதற்காக வந்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. தவறு என்று இருக்கும்பட்சத்தில் தமிழகத்தில் நடந்தால் தமிழக அரசும் ஆந்திராவில் நடந்தால் ஆந்திர அரசும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் நீக்கப்பட்டது மீண்டும் சேர்க்கப்பட்டது குறித்து கேட்டபோது கட்சி ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து தலைவர்களைத்தான் கேட்க வேண்டும். 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் அதிமுகவுடன் சேர்வது போன்ற பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்கள் வேறு, நாங்கள் வேறு. எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தினகரனை தவிர்த்து யார் வேண்டுமானாலும் அதிமுகவில் வந்து இணையலாம். தேர்தல் அறிவித்த பின்பு அது குறித்து தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்றார்.