பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்காக கோட்டத்திற்கு 2 மருத்துவ முகாம்கள் என நாள்தோறும் 200 கோட்டங்களில் 400 இடங்களிலும் மற்றும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களுக்குட்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு மருத்துவ அலுவலர் குழுவோடு சென்று மருத்துவ முகாம்கள் நடத்தவும் மற்றும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களில், புற நோயாளிகளுக்கு சிகிச்சை என 680 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த மருத்துவ முகாம்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு தமிழக அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படும் தடுப்பு,பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம்  ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், 

மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் முகக் கவசம், கிருமிநாசினி திரவம் மற்றும் கைகழுவும் சோப்பு தயாரிக்கப்பட்டு,  தூய்மைக் காவலர்களுக்கு குறைந்த விலையில் இதுவரை 7,65,530 எண்ணிக்கையில் முகக்கவசங்களும், 12,850 லிட்டர் கிருமி நாசினியும், 28,547 லிட்டர் கை கழுவும் திரவ சோப்பும் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோயெதிர்ப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளில் 70,851 க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுவினர் தன்னார்வத்துடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர். கிராம அளவில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை 19,792 சுய உதவி குழு உறுப்பினர்கள்  8.45 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்து உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, நகர்ப்புறங்களில் வாழும் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூபாய் 1000 வீதம், தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் 1,05,853 தெருவோர வியாபாரிகளுக்கு ரூபாய் 10,58கோடி வழங்கப்பட்டுள்ளது. 

நகர்ப்புறங்களில் உள்ள 168  வீடற்றவர்களுக்கான உறைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 6,363 விடற்றவர்களுக்கு இதுவரை நகர்ப்புற மேம்பாட்டு இயக்க நிதியின் மூலம் 1.90 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உணவு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் தெரிவித்தார். மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், சாலைப் பணிகள் 197 பேருந்து தட சாலைகளை மேம்படுத்தும் பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள் போன்ற திட்டப்பணிகள் குறித்தும், நகராட்சி நிர்வாக  ஆணையரகத்தின் சார்பில் சீர்மிகு நகர திட்டம், அம்ருத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் விடுபட்ட பணிகளுக்கான மதிப்பீட்டிற்கு ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான நிலை குறித்தும், பேரூராட்சிகளின் இயக்கத்தின் சார்பில் அம்ருத் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், சாலை பணிகள், தெருவிளக்குகள் அனைவருக்கும் வீடுகள் போன்ற பணிகளின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.