கோவையில் வார்டுக்கு 100 பேர்.. அதிமுகவின் பலே திட்டம்.. டென்ஷன் ஆன 'செந்தில் பாலாஜி'
கோவையில் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக சதி செய்யப்போவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வருகிற 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களில் சில சலசலப்புகளை தாண்டி தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், சென்னை உள்பட சில இடங்களில் கள்ள ஓட்டு தொடர்பான புகார்களால் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், வாக்குப்பதிவு எந்திரம் உடைப்பு, வாக்குப்பதிவு எந்திரம் பழுது உள்ளிட்ட இடையூறுகள், பிரச்சினைகளும் நடந்தன. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளான சென்னை, மதுரை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி இன்று 5 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.தேர்தலுக்கு முந்தைய நாளில் கோவையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு பலரும் வன்மையாக கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டு வந்தனர்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘ ஒரு வார்டுக்கு 100 பேர் வீதம் வாக்கியங்களில் குவிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் நடந்த ரகசிய கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி புகார் கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் அதிமுக முயற்சிகளை எதிர்கொள்வதற்கு திமுக முகவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவினர் வன்முறையில் இறங்கினாலும் திமுகவினர் அமைதி காக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் திமுக கூட்டணியே கைப்பற்றும். வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெற திமுகவினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவின்போது அதிமுகவினர் அத்துமீறி நடந்து கொண்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி புகார் அளித்தார். விதிகளை மீறி அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடிகள் சென்றதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி அதிமுக மீது கடும் குற்றசாட்டை வைத்தார்.