தமிழக உள்ளாட்சித் தேர்தலில் எப்போதும் சென்னை மாநகராட்சித் தேர்தல்தான் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். தலைநகரில் உள்ள அதிகார மையங்களோடு சேர்ந்து பணியாற்றும் மேயர் யார் என்ற கேள்வி தலைநகரவாசிகளை மட்டுமல்ல தமிழக அரசியல்வாதிகள் மத்தியிலும் எழும். ஆனால், இந்த முறை அந்த இடத்தை கொங்கு மண்டலமான கோவை பிடித்திருக்கிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை அதிமுகவின் கோட்டை என்பதைச் சுக்கு நூறாக உடைக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் களமிறங்கியிருக்கிறது திமுக. 

மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கோவை மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை திமுக நடத்தியதாகவும் அதில் திமுக வெற்றி பெறும் என்று தெரிய வந்திருப்பதாகவும் தகவல்கள் சிறகடிக்கின்றன.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் எப்போதும் சென்னை மாநகராட்சித் தேர்தல்தான் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். தலைநகரில் உள்ள அதிகார மையங்களோடு சேர்ந்து பணியாற்றும் மேயர் யார் என்ற கேள்வி தலைநகரவாசிகளை மட்டுமல்ல தமிழக அரசியல்வாதிகள் மத்தியிலும் எழும். ஆனால், இந்த முறை அந்த இடத்தை கொங்கு மண்டலமான கோவை பிடித்திருக்கிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை அதிமுகவின் கோட்டை என்பதைச் சுக்கு நூறாக உடைக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் களமிறங்கியிருக்கிறது திமுக. 2011, 2016, 2021 என மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் திமுகவுக்கு பாராமுகமாக மாறி டாட்டா காட்டியது கோவை. 2011, 2021-இல் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 10 தொகுதிகளையும் வென்று காட்டியது அதிமுக கூட்டணி. 2016-இல் 10-இல் 9இல் வெற்றி கண்டது அதிமுக. அப்போது சிங்காநல்லூரில் மட்டுமே வெற்றி கண்டது திமுக. எனவே, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுகவுக்கு இது கவுரவப் பிரச்சினையாக ஆகிவிட்டது.

இதையொட்டியே சட்டப்பேரவைத் தேர்லுக்குப் பிறகு கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக கோவையில் களமிறக்கிவிட்டது. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜியும், அதிமுக கோட்டையில் ஓட்டையைப் போடும் பணிகளைத் தொடங்கினார். தொடர்ந்து மக்கள் சந்திப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை, நலத்திட்ட உதவிகள் என கடந்த 6 மாதங்களாக கோவையில் ஓய்வின்றி உழைத்திருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அதிமுக கூட்டணி 43 சதவீத வாக்குகளைப் பெற்றது. திமுக கூட்டணி 37 சதவீத வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 14 சதவீத வாக்குகளையும் பெற்றது. 

இதை அப்படியே உல்டாவாக்கும் வகையில் செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினர் உழைத்தபோதும், வழக்கம்போல கரண்சி மழையையும் பொழிந்தனர். திமுகவுக்கு இணையாக எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுகவினரும் வாக்காளர்களை வளைத்தனர். இதனால் கோவை முழுவதுமே பண மழை பொழிந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆளுங்கட்சியாக இருப்பதால் திமுக சகல அதிகாரங்களை செலுத்தும் என்று ஆண்ட கட்சியும் அதே ஃபார்முலாவை நடத்தியதுமான அதிமுக அறிந்து வைத்திருக்கிறது. இதற்கிடையே நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் செந்தில் பாலாஜி டீம், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியதாக கோவை திமுகவில் தகவல்கள் உலா வருகின்றன. வழக்கமாக சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை செய்தி நிறுவனங்களும் உளவு அமைப்புகளும் கட்சிகள் ஏற்பாட்டில் தனியாரும் நடத்துவது வழக்கம்தான்.

ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் ஆளுங்கட்சியினர் சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தியிருப்பதாக வெளியாகும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோவையில் உள்ள 100 வார்டுகளில் திமுக 75, காங்கிரஸ் 9, சிபிஎம் 5, சிபிஐ 4, மதிமுக 3 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 2, மமக, இயூமுலீக் தலா 1 என இக்கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டுள்ளன. அதிமுக 99 வார்டுகளிலும் தமாக 1 வார்டிலும் களமிறங்கியுள்ளன. பாஜக, மநீம, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்து களமிறங்கியுள்ளன. இந்தக் கருத்துக்கணிப்பில் திமுக மட்டும் 65 முதல் 70 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிய வந்திருக்கிறதாம். திமுக கூட்டணி கட்சிகள் 10 வார்டுகளில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். கோவை மாநகராட்சியைக் கைப்பற்ற 51 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும். எனவே, திமுகவுக்கு வெற்றி நிச்சயம் என்ற மனநிலையில் திமுகவினர் தெம்பாக இருக்கிறார்கள்.