செங்கோட்டையனின்  சர்வாதிகார சாயம் வெளிப்பட துவங்கியுள்ளது! என்று ஒரு விமர்சனம் வெடித்திருக்கிறது. 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஒட்டுமொத்தமாகவே அ.தி.மு.க. அரசாங்கம்  ‘சோபிக்கவில்லை’ எனும் விமர்சனத்தை மட்டும் வாங்கிக் குவித்தது. ஆனால் ஒரேயொரு துறை மட்டும் அதில் தப்பிப் பிழைத்தது. அது ‘பள்ளிக் கல்வி துறை’. கிரேடு சிஸ்டம் அறிமுகம், சிலபஸில் புதுமை, சீருடை நிறை மாற்றம், பொதுத்தேர்வுகளின் அட்டவணை கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னதாகவே அறிவிப்பு! என்று பட்டையை கிளப்பியது. 

இதற்காக அந்த துறையின் அமைச்சர் செங்கோட்டையன் வெகுவாக பாராட்டப்பட்டதோடு, அத்துறையின் செயலரான உதயசந்திரனும் அதற்கு இணையாக பாராட்டப்பட்டார். ஏற்கனவே அரசு நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றி, வெகுஜனத்துக்கு அறிமுகமாகி இருந்த காரணத்தினால்  உதயசந்திரனுக்கான பாராட்டுதல்கள் மிக உச்சத்திலேயே இருந்தன என்பது யதார்த்தம். பள்ளி கல்வித்துறையின் மறுமலர்ச்சிக்கும், புரட்சிக்கும் உதயசந்திரனின் மூளையே காரணம்! எனும் தகவல் தமிழகம் தாண்டியும் தடதடத்தது.

இதை துவக்கத்தில் செங்கோட்டையன் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவரது ஆதரவு அடிப்பொடிகள் இதை ஊதி பெரிதாக்கினர். ‘தலைவரே அதெப்படி உங்க பெயரை மறைச்சுட்டு வேணும்னே அந்தாளை ப்ரமோட் பண்றாங்க?’ என்று தூண்டிவிட்டனர். இதனால் உதய்யை செங்ஸ் கொஞ்சம் கடுப்போடு பார்க்க துவங்க, ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டது. இதனால் விழாக்கள், பேட்டிகள் போன்றவற்றில் உதயசந்திரன் டம்மியாக்கி தள்ளி நிறுத்தப்பட்டார். 

கணிசமான நாட்களாக திரையிடப்பட்டு வைக்கப்பட்ட உதயசந்திரனை சமீபத்தில் வேறு துறைக்கு மாற்றியும் விட்டார்கள். இந்நிலையில் இன்று கோயமுத்தூர் விமான நிலையத்தில் பிரஸ்ஸை சந்தித்திருக்கிறார் செங்கோட்டையன். அப்போது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த உதயசந்திரனை மாற்றியது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது...

‘உதயச்சந்திரன் ஒன்றும் உலக தலைவர் அல்ல. ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம்.’ என்று வெடுக்கென பதில் தந்திருக்கிறார் அமைச்சர். 

இதைத்தான் போட்டுப் பொளக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ‘செங்கோட்டையனின் சர்வாதிகார சாயம் வெளிப்பட துவங்கியிருக்கிறது. தன் துறையில் புரட்சிகர மாற்றங்களையும், மாணவர் நலன் மிக்க விஷயங்களையும் கொண்டு வரவேண்டும் என்று உண்மையிலேயே விரும்புபவராக இருந்தால் நல்ல செயலரை தன் கூட வைத்திருப்பதில் ஈகோ பார்த்திருக்க மாட்டாரே? ஆக அவர் சாதாரண அரசியல்வாதியே தவிர தனிப்பெரும் தலைவரெல்லாம் இல்லை. 

சர்வாதிகார எண்ணம் மனதில் இருக்கப்போய்தானே இன்று இப்படியொரு பதிலை சொல்லியிருக்கிறார்?’ என்கிறார்கள். 

ஆனால் செங்கோட்டையன் தரப்போ ‘கல்வித்துறை மாற்றங்களுக்கு பாராட்டுகள் கிடைத்தபோது பெருந்தன்மையாக அதில் உதயச்சந்திரனையும் பங்கெடுக்க வைத்தது அமைச்சர்தான். ஆனால் உதயசந்திரன் விஷயத்தை வைத்து சிலர் கேம் ஆட ஆரம்பித்தார்கள். 

இந்த போக்கு கல்வித்துறையின் வளர்ச்சியை பாதித்தது. ஒட்டுமொத்தமாக உதயச்சந்திரனின் மாற்றம் என்பது இயல்பாக நடந்த ஒன்றுதான். ஆனால் இதை வைத்து தேவையில்லாமல் அமைச்சரின் பெயரை டேமேஜ் செய்து விளையாடுகிறார்கள்.” என்கிறது.