தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக பெற்றோர் சம்மத கடிதத்துடன் தான் வர வேண்டும் என வருவாய்த்துறை மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து அறிவிப்பார்.

மேலும், பள்ளி திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அவர்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக மட்டுமே அக்டோபர் 1-ம் தேதி பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கருத்து கேட்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அக்டோபர்1-ம் தேதி முதல் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள பள்ளிக்கு வரலாம் என்று அறிவித்து விட்டு, சந்தேகங்களை வீட்டில் இருந்தே கேட்டறிய கட்டணமில்லாத தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.