Asianet News TamilAsianet News Tamil

3வது முறையும் திமுக கனவு அம்பேல்..மீண்டும் அரியணை ஏறப்போகும் அதிமுகவை மிரட்டுவதா.? கொந்தளி்க்கும் செல்லூரார்!

கடந்த 10 வருடங்களில் மட்டும் 123 தேசிய விருதுகளை உள்ளாட்சித் துறைக்கு வென்று வந்து, இந்தியாவின் தலை சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழகம் என்னும் பெருமையைத் தமிழ் மண்ணுக்குக் கொண்டு வந்து சேர்த்திருப்பவர்தான் தொண்டாமுத்தூர் தொகுதி தந்த தூய நல் உழைப்பாளியான எங்கள் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்பதை எல்லாம் நேரு போன்ற நெறிகெட்ட கோமாளிகளின் அறிக்கைகளால் களங்கப்படுத்தவே முடியாது.

Minister Sellur Raju slam M.K.Stalin and K.N.Nehru
Author
Chennai, First Published Jun 9, 2020, 8:35 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பட்டுவேட்டி கட்டும் கனவில் ஆழ்திருந்த போது கட்டியிருந்த கோமணமும் பறிபோனது என்னும் கதையாக 2021ல் சட்டமன்றப் பொது தேர்தலோடு, தமிழக மக்களால் முடிவுகட்டப்படக் காத்திருக்கும் திமுக, மூன்றாம் முறையாக ஆட்சியில் இருந்துகொண்டே முடிசூடக் காத்திருக்கும் கழகத்தைப் பார்த்து மிரட்டுவது என்பது இமயம் அரித்துத் தின்ன, கரையான்கள் காணுகிற கனவுக்குச் சமம் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொள்ளை நோய் கொரானாவிலிருந்து தமிழகத்தைத் காத்திடத் தம்மை மெய்வருத்தி உழைக்கும் தமிழக முதல்வர் எடப்பாடியின் இரவு பகல் பாரா தொண்டால், இன்று தமிழகம் கொரானா நோயிலிருந்து குணமாவோர் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே முதலிடம் என்பதோடு, தடுப்பு மருந்தும், குணப்படுத்தும் மருந்தும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் மனித குலத்தைக் காத்திட உலகமே போராடி வரும் காலத்தில், மரண சதவீதம் குறைவாக இருப்பதில் உலகிலேயே தமிழகமே முதலிடம் என்பதோடு கொரோனா பரிசோதனைக் கூடங்களை அதிகமாக அமைத்திருப்பதிலும் சராசரியாகச் சுமார் நாளொன்றுக்கு 15,000-க்கு மேற்பட்ட கொரோனா பரிசோதனைகளை நடத்துவதிலும், இந்தியாவில் தமிழகமே முதலிடம் என்னும் உலகத்தின் பாராட்டுதல்களோடு சமூகப் பரவல் என்னும் நிலைக்குத் தமிழகம் ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக அல்லும் பகலும் அயராது போராடி வருகிறது ஜெயலலிதா வழியிலான எடப்பாடி பழனிசாமியின் மகோன்னத அரசு.
ஆனால், இத்தகைய இக்கட்டான தருணத்தில் அரசுக்குத் துணை நின்று ஆக்கம் கூட்டாமல், அவதூறு அறிக்கைகள் விடுத்து அற்ப அரசியல் நடத்தும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மனித நேயமற்ற செயல்கள் அருவருப்பின் உச்சமாகிவிட்ட நிலையில், அதனைச் சுட்டிக் காட்டி அறிக்கை விடுத்தால் அதற்கான உரிய பதிலை அவர் சொல்வதற்குப் பதிலாக, முன்னாள் வரமிளகாய் வியாபாரியும், குடும்பக் கட்சியான திமுகவில் கருணாநிதி துணைவியார் கோட்டாவில் அரசியல்வாதியாகி, கொள்ளை அடிப்பதில் தங்க மெடல் வென்று அதன் வழியிலான ஊழல் வழக்குகளில் தலை தப்புமா என நீதிமன்றப் படிக்கட்டுகளில் தவம் கிடக்கும் ஊழல் பேர்வழியான கே.என்.நேருவை வைத்து பினாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.


கனிம வளங்களைக் களவாடுவதிலும், காவேரிக் கரையில் உள்ள மொத்த சொத்துக்களையும் அபகரித்துச் சுருட்டுவதிலும், தில்லைநகர் தொடங்கி திருச்சியையே வளைப்பதிலும், பெரும் கொள்ளைக்காரக் குடும்பம் என்று பெயர் பெற்றதோடு, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையையே காய்லாங்கடையாக மாற்றியவர் நேரு என்பதை நாடு அறியும். பூவாளூரில் நவீன அரிசி ஆலை, அதனைச் சுற்றி நெல் விளையும் நிலங்கள், புங்கனூர் ஏரியைத் தூர்த்து, புதுவகையான கட்டடங்கள் கட்டி, கல்வி சேவை என்ற பெயரிலே கொள்ளைஅடிக்கும் கேர் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்கள், சென்னையிலும் கோவையிலும், கண்ணுக்குள் அடக்க முடியா அளவிற்கு அடுக்கு மாடிக் கட்டடங்கள், கூடவே தன் தம்பிமார்களான ராமஜெயம், ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோரைத் திருச்சிக்கு ஒருவர், சென்னைக்கு ஒருவர், கோவைக்கு ஒருவர் என மண்டலங்கள் வாரியாக நியமித்து, நேரு அடித்துக் குவித்திருக்கும் ஆஸ்திகளைக் கணக்கிட்டால் கால்குலேடருக்குமே கிறுக்கு பிடிக்கும் என்பது நிச்சயம்.
இப்படி, பொது வாழ்வை வைத்து, புதுவசந்தம் கண்ட நேரு, அம்மாவின் வழியில் அற்புத ஆட்சி நடத்துகிற தமிழக முதல்வரை, இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம் என்பதற்கான விருதுகளைக் குவித்து வந்த வெள்ளந்தித் தலைவனை, விவசாயிகள் கொண்டாடி மகிழும் உழவன் வீட்டில் உதித்த ஒப்பில்லா முதல்வரை, திரைகடலோடி தேன் தமிழ் பூமிக்கு உலக முதலீடுகளைத் திரட்டி வரும் ஓய்வறியா உழைப்பாளி முதல்வரை வசைபாடுவதும், எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து கழகத்தைக் காத்திடும் கேடயமாகவும், விசுவாசமிக்க போர்வீரனாகவும், களமாடும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியைப் பற்றியும் மு.க.ஸ்டாலின் முன்னேற்பாட்டில் தரந்தாழ்ந்த அறிக்கை விட்டிருக்கிறார்.
மானத்தை இழந்து மகேஷ் பொய்யாமொழி பின்னால் நின்று அரசியல் பிழைப்பு நடத்தும் பரிதாபத்திற்குரிய கே.என்.நேரு,பேரரறிஞர் அண்ணா கண்ட பேரரறிவு இயக்கத்தை, அவர் வழியில் நடத்துவதற்கு வக்கற்று வடநாட்டிலிருந்து வாடகைக்கு ஆள்பிடித்து வந்து கட்சி நடத்துகிற ஸ்டாலினின் எடுபடி நேரு, சிறைக்குச் செல்ல நேரிடும் என்று மிரட்டுகிறார். அண்ணா நகர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பம், பெரம்பலூர் சாதிக், கே.கே.நகர் பகுதி தி.மு.க மகளிரணி செயலாளர் பால்மலர் என ஸ்டாலினால் பரலோகம் அனுப்பப்பட்ட பட்டியலுக்கும், ஜெயலலிதா சுட்டிக் காட்டியது போல், ஒரு லட்சம் கோடிக்கும் மேல் ஸ்டாலின் குவித்து வைத்திருக்கும் ரொக்கத்திற்கும், இவற்றோடு ஆறறிவே இல்லா அவரது புத்திரர், ஏழாம் அறிவு என்று சினிமா தயாரிப்பதற்கும், உழைக்காமல் சும்மா இருந்து கொண்டே, ஹம்பர் கார் ஓட்டுவதற்கும், தன் முகத்தைத் தான் பார்த்துக் கொள்ள, தமிழ் சினிமாவில் தன் பணத்திலேயே தன்னை ஹீரோ ஆக்கிக் கொண்டதற்கும் எங்கிருந்து வந்தது இத்தனை லட்சம் கோடிகள் என்னும் கேள்விகளாலும் மு.க.ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் தான் எதிர்காலத்தில் சிறை செல்லக் காத்திருக்கிறார்கள்.
அப்போது இந்த உத்தமர் நேரு மீதான சொத்துக் குவிப்பு வழக்கிற்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் நிச்சயம் வெளிவந்து விடும். மேலும், வக்ஃபு வாரியச் சொத்துகளை வளைத்து, பாசன வாய்க்கால்களைத் தூர்த்து, திருச்சியில் அறிவாலயம் அமைத்த விவகாரமும், நேருவும் அவரது தம்பிமார்களும் ஆடிய ஆட்டங்களால், கண்ணீர் விட்டுக் கதறி அழுத குடும்பச் சாபங்களும், நேருவையும் சேர்த்தே சிறைக்கு அனுப்பும் என்பது நிச்சயம். வேண்டுமானால், பாவங்களைக் கழுவிட ஸ்டாலின் மூட்டை கட்டி வைத்திருக்கும் அந்த ஒரு லட்சம் கோடி பணத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களுக்குக் தலைக்கு ரூ.10,000 என நிவாரண நிதி கொடுக்கட்டும். 
அதையாவது “இந்தாம்மா புடிமா” என்று மூதாட்டி ஒருவருக்கு ஆணவத்தோடு அரிசிப் பையை எடுத்து வீசிய நேருபோல் அல்லாது அன்போடு வழங்கட்டும். இதற்கெல்லாம் மனமில்லாத திமுகவின் அரசியல் பிழைப்பிற்கான எல்லாக் கதவுகளும் எடப்பாடியார் என்கிற எளிமை சாமானிய முதல்வரின் ஏராள சாதனைகளால் மூடப்பட்டுவிட்ட நிலையில், இனி அவதூறுகளே தங்களுக்கான கடைசி ஆயுதம் என முடிவெடுத்து, கூலி ஆட்களை ஏற்பாடு செய்து, திட்டமிட்டு திமுக பரப்புகிற அவதூறுகளுக்கு எதிராக நாம் எடுக்கும் சட்ட நடவடிக்கைகளைக் குற்றம் சொல்லும் இவர்கள், பட்டப் பகலில் மூன்று பத்திரிக்கை ஊழியர்களை எரித்துக் கொலை செய்த பாவிகள் என்பதை இந்த நாடே அறியும்.
கருணாநிதி குடும்பத்தின் கனிம வள கொள்ளையை அச்சிட்டு அம்பலப்படுத்தியதற்காக தினபூமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறனையும், அவரது மகனையும் கை விலங்கு பூட்டிச் சிறையில் அடைத்த இவர்கள் தங்களைப் பத்திரிகையாளர்களின் பாதுகாவலர் போல் காட்டிக் கொள்வது பச்சை மோசடியே. இன்று, ஸ்டாலினுக்காக அறிக்கைவிட்டிருக்கும், இதே நேரு, 2006-11ம் ஆண்டுகளிலான திமுக ஆட்சி காலத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் நிருபர் மற்றும் அலுவலகத்தைத் தன் அடியாட்களை ஏவி தாக்குதல் நடத்தியவர் என்பதும் அதன் மீதான புகாரை ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நீர்த்து போக வைத்தவர் என்பதையும் மக்கள் அறிவார்கள். எனவே, ஒரே இயக்கத்தில், நாற்பது வருடங்கள் விசுவாசத்தோடு உழைத்து, கிளைக் கழகச் செயலாளரில் தொடங்கி இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்திருக்கும் எங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட ஒப்பில்லா இயக்கத்தை வாகை வழி நடத்த மாங்கனி மாநகர், கழகத்திற்கு வழங்கியிருக்கும் இரண்டாம் இதயக்கனி.


அவர்தம் வழியில், கடந்த 10 வருடங்களில் மட்டும் 123 தேசிய விருதுகளை உள்ளாட்சித் துறைக்கு வென்று வந்து, இந்தியாவின் தலை சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழகம் என்னும் பெருமையைத் தமிழ் மண்ணுக்குக் கொண்டு வந்து சேர்த்திருப்பவர்தான் தொண்டாமுத்தூர் தொகுதி தந்த தூய நல் உழைப்பாளியான எங்கள் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்பதை எல்லாம் நேரு போன்ற நெறிகெட்ட கோமாளிகளின் அறிக்கைகளால் களங்கப்படுத்தவே முடியாது.
எதுவரினும், எவர்வரினும் நேருக்கு நேர் நின்று வென்று காட்டும் எங்களுக்கு இந்த நேரு, ஒரு பொருட்டல்ல. தங்கள் இருப்பையும், தங்கள் அரசியல் வெறுப்பையும் வெளிக்காட்ட தலைமைச் செயலாளரிடம் தகராறு, மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு மல்லுக்கட்டு, ஆண்டான் அடிமைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வழக்கொழிந்து போன வார்த்தைகளைப் பயன்படுத்திப் பட்டியல் இனத்து மக்களைப் புண்படுத்தியது, இப்படியெல்லாம் திமுக தரங்கெட்டு நடந்துவிட்டு பிறகு முன்ஜாமீன் கேட்டு அலைகின்ற திராவிட முன்ஜாமீன் கழகமாகி நிற்கிறது. எனவே, பட்டுவேட்டி கட்டும் கனவில் ஆழ்திருந்த போது கட்டியிருந்த கோமணமும் பறிபோனது என்னும் கதையாக 2021ல் சட்டமன்றப் பொது தேர்தலோடு, தமிழக மக்களால் முடிவுகட்டப்படக் காத்திருக்கும் திமுக, மூன்றாம் முறையாக ஆட்சியில் இருந்துகொண்டே முடிசூடக் காத்திருக்கும் கழகத்தைப் பார்த்து மிரட்டுவது என்பது இமயம் அரித்துத் தின்ன, கரையான்கள் காணுகிற கனவுக்குச் சமமாகும்.
மன்னாதி மன்னனும், முகராசி அம்மாவும் எங்களுக்குக் கற்று தந்ததெல்லாம், விண் முட்ட வந்தாலும், விழி சிமிட்டா வீரத்தைத் தானே தவிர ஒரு நாளும் கோழைத்தனத்தை அல்ல. பொது வாழ்வில் ஏவப்படுகிற அவதூறுகளை நெஞ்சு நிமிர்த்தி எதிர்கொள்ளக் கற்றவர்கள் நாங்கள். இதனைப் பினாமி நேருவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் ஸ்டாலின் பிரசாந்த் கிஷோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என்று அறிக்கையில் காரசாரமாக செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios