நீலகிரி மாவட்டத்தில் இருக்கும்  முதுமலையில் யானைகள் நல்வாழ்வு முகாம் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று காலையில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், கட்சியினர் என ஏராளமானோர் வந்திருந்தனர்.

அப்போது அமைச்சர் சீனிவாசனின் கால் செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அவர் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து செருப்பை கழட்ட சொல்லியிருக்கிறார். "டேய் வாடா.. செருப்பை கழட்டுடா" என அமைச்சர் சிறுவனை அனைவர் முன்னிலையிலும் அழைத்தார். சிறுவனும் செருப்பை அமைச்சரின் காலில் இருந்து கழட்டியிருக்கிறான். இதை அங்கிருந்த ஊடகங்கள் அனைத்தும் பதிவு செய்தன. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி அனைவரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.

இந்தநிலையில் தனது செயலுக்கு அமைச்சர் தற்போது வருத்தம் தெரிவித்திருக்கிறார். பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான் சிறுவனை அழைத்ததாகவும், அந்த சிறுவன் தனக்கு பேரன் மாதிரி என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். தனது செயலில் எந்தவித உள்நோக்கமும் இல்லை எனவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

'வாடா.. செருப்பை கழட்டுடா..! சிறுவனை அழைத்து தனது காலனியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!