சென்னையில் ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்காக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் 3 வேளையும் கட்டணமில்லாமல் உணவு வழங்கப்பட்டு வந்தது. பிறகு அந்தந்தப் பகுதிகளில் உள்ள அதிமுகவினர் அம்மா உணவக செலவுகளை ஏற்றுக்கொண்டு இலவச உணவுகளை வழங்கி வந்தனர். இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவுக்கான காலக்கெடு இரு தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.


இதனையடுத்து அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது கைவிடப்பட்டு, நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னையில் ஊரடங்கு தொடரும் நிலையில், ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில்கொண்டு அம்மா உணவங்களில் இலவச உணவுகள் வழங்குவதைத் தொடர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவுப்படி சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.