சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை அமைத்த பின்னர், அது மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பூட்டு போட்டு பூட்டிவிடலாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. சென்னை-சேலம் இடையே 277 கி.மீ தூரத்திற்கு 8 வழிச்சாலை போடப்பட உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பாதிக்கப்படும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

8 வழிச்சாலை அமைக்கப்படுவதால் விவசாய நிலங்களை இழக்கும் விவசாயிகள், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சில எதிர்க்கட்சியினரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இத்திட்டத்திற்கு எதிராக போராடிய மன்சூர் அலிகான், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 8 வழிச்சாலை திட்டத்திற்கு இன்னும் எதிர்ப்புகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. 

இந்நிலையில், 8 வழிச்சாலை குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பது மக்களின் எதிர்ப்புகளை கிண்டல் செய்யும் விதமாக அமைந்துள்ளது. 

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர முயற்சித்ததற்காக மதுரை தோப்பூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை குறைக்கவே சில விஷமிகள், சென்னை - சேலம் 8 வழிச்சாலையை எதிர்க்கின்றனர். 8 வழிச்சாலையை அமைத்த பின்னர் அது மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பூட்டு போட்டு பூட்டிவிடுவோம் என உதயகுமார் தெரிவித்தார். 

8 வழிச்சாலைக்கு எதிராக மக்கள் போராடிவரும் நிலையில், அந்த போராட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக அமைச்சர் பேசியிருப்பது மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.