மக்களவை தேர்தலில் தினகரன் கட்சியான அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னமானது காலி பெருங்காய டப்பா என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இந்த அறிவிப்பு வெளியானதும், தினகரன் கட்சியினர் முழுவீச்சில் தங்களுடைய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தேனி மக்களவை அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் உசிலம்பட்டி பகுதிகளில் இன்று கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தார். அவருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீதிபதி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர். 

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறது. ஆனால் தி.மு.க.வினர் தனி நபர் விமர்சனம் செய்து ஓட்டு கேட்கிறார்கள். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார். ஜெயலலிதா மீது வழக்குகளை போட்டு தொல்லை கொடுத்த தி.மு.க.வினர் இப்போது ஜெயலலிதா மீது பரிதாபம் காட்டுகிறார்கள். மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் நடத்த பார்க்கிறார். அ.தி.மு.க.வை அழிக்கப்போவதாக கூறிய டி.டி.வி. தினகரன் வருகிற மக்களவை தேர்தலோடு காணாமல் போய் விடுவார் காட்டமாக தெரிவித்தார். 

தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்திருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அந்த பரிசுப் பெட்டையை திறந்துப் பார்த்தால் பரிசும் இருக்காது, ஒன்றும் இருக்காது. அது காலி பெருங்காய டப்பா. அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்தச் சின்னத்தை அவர் மக்களிடம் கொண்டு செல்வதற்கு முன் தேர்தல் முடிந்துவிடும். இரட்டை இலை சின்னம் தான் வெற்றி மகுடம் சூடும் சின்னமாகும். தேனி மக்களவை தொகுதியில் பெறும் வெற்றி டெல்லி வரை எதிரொலிக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.