பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் திமுகவிற்கு ஆதரவாக வந்துள்ள நிலையில், இதுகுறித்து அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஏபிபி - சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு 160 - 172 இடங்களும் அதிமுகவுக்கு 58 - 70 இடங்களும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்தியா டுடே Axis My India நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.கவுக்கு 175- 195 இடங்களும் அ.தி.மு.கவுக்கு 38 - 54 இடங்களும் அ.ம.முகவுக்கு 1-2 இடங்களும் ம.நீ.மவுக்கு 0 -2 இடங்களும் கிடைக்குமெனக் கூறப்பட்டுள்ளது. ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பின்படி தமிழ்நாட்டில் தி.மு.கவுக்கு 160 முதல் 170 இடங்கள் கிடைக்குமென்றும் அ.தி.மு.கவுக்கு 58 - 68 இடங்கள் கிடைக்குமென்றும் என்றும் கூறப்பட்டது. 

பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் திமுகவிற்கு ஆதரவாக வந்துள்ள நிலையில், இதுகுறித்து அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் 2வது டோஸ் கொடோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் தாமகவே முன்வந்து தடுப்பூசி எடுத்துக்கொள்வதாகவும், தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் மக்களிடம் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசியால் மட்டுமே முடியும் என்றும், தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். 

தொடர்ந்து நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு எப்போதுமே வெற்றி பெற்றதில்லை என்றும், அதற்கு 2016ம் ஆண்டு வெளியான கருத்துக் கணிப்பே சிறந்த உதாரணம் என்றும் தெரிவித்தார். மக்கள் கணிப்பு மட்டுமே வெற்றி பெறும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வழக்கம்போல் தோல்வியடையும் .திமுக வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பு திமுகவிற்கு தற்காலிகமான மகிழ்ச்சியை தரும் எனவும், மக்கள் மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், அதிமுக மாபெரும் வெற்றியை பெற்று முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் என அடித்துக்கூறினார்.