தமிழகத்தில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் எந்த லாபமும் கிடையாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் பல மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றும் தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை. இதனால் அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக தமிழகத்தில் ஒரே தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. திமுக 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ’’அ.தி.மு.க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மக்கள் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், தி.மு.க நஞ்சை விதைத்து வெற்றியை அறுவடை செய்துள்ளது. கடந்த 6 மாதங்களாக பொய்யான பிரசாரத்தை மக்கள் மத்தியில் பரப்பி திமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் அந்தக் கட்சிக்கு எந்த லாபமும் கிடையாது’’ என அவர் விமர்சித்துள்ளார்.