Asianet News TamilAsianet News Tamil

பலருக்கு கொரோனா பரவ திமுவின் ஒன்றிணைவோம் வா.. காரணமாகி விட்டது..! ஸ்டாலின் மீது பழிபோட்ட அமைச்சர் கே.டி.ஆர்.!

தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் செல்வோரால் பல மாவட்டங்களில் மீண்டும் நோய்த்தொற்று பரவும் அபாயத்திற்கும் காரணமே கொரோனாவை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் ஸ்டாலினின் அதிகார வெறி தான்.
    

minister rajendra balaji criticized dmk chief mk stalin regarding ondrinaivoom vaa
Author
Chennai, First Published Jun 16, 2020, 12:55 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தரங்கெட்ட அரசியலை நிறுத்து, தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி உன்னை நீயே தனிமைப்படுத்து என திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்  முழு விவரம்:- உலகளாவிய தொற்று நோய் பேரழிவு என்று உலக நாடுகளாலும், உலக சுகாதார அமைப்பாலும் பிரகடனம் செய்யப்பட்ட கொள்ளை நோய் கொரோனாவுக்கு எதிராக மனிதகுலமே பெரும் போராட்டத்தை நிகழ்த்தி வருகிறது.அதிலும் குறிப்பாக மருத்துவ உட்கட்டமைப்பில் மிகவும் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இஸ்ரேல், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளே ஆச்சரியப்படும் விதத்தில் கொரோனாவுக்கு எதிராக இந்திய தேசம் இடையறாது போராடி வருகிறது. அப்படிப்பட்ட இந்திய நாடே தமிழகத்தை மனமுவந்து பாராட்டும் வகையில் எளிமைச் சாமானியர் எடப்பாடியாரின் அரசு நோய் தடுப்பிலும், கொரோனாவை குணப்படுத்துவதிலும், கொரோனாவினாலான மரண சதவீதத்தை உலகிலேயே குறைவான சதவீதத்திற்குள் நிறுத்தியதிலும், இந்தியாவிலேயே நாளொன்றுக்கு சுமார் 15 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை நடத்துவதிலும், அதற்கான கொரோனா பரிசோதனை கூடங்களை இந்தியாவிலேயே அதிகளவில் அமைத்ததிலும் என நாட்டுக்கே வழிகாட்டும், திறமைமிக்க மாநிலமாக தமிழகத்தை முன்னெடுத்து வருகிறார், உழவன் வீட்டில் உதித்த ஒப்பில்லா முதல்வர் எடப்பாடியார்.
அதே வேளையில் அரசியல் கடந்து இனம், மொழி, சாதிகளை மறந்து கொள்ளைநோய் கொரோனாவை ஒழித்து கட்டிட ஓரணியில் திரண்டு, ஓர் கோட்டில் உழைக்கிறது இம்மண்ணில் வாழ்கிற ஒட்டுமொத்த மானுட சமூகம்.

ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளுக்கும் மாறாக கொரோனாவிலும் அரசியல் செய்து மக்களை குழப்பியும், இரவு பகல் பாராது உழைக்கும் மருத்துவர்களை, செவிலியர்களை வருவாய் துறையினரை, காவல் துறையினரை, ஒட்டுமொத்தத்தில் மக்களுக்காக அரும்பாடுபடும் அரசு ஊழியர்களையெல்லாம் மனச்சோர்வு அடையச் செய்யும் வகையிலும், மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கும் நோக்கத்திலும் எதிர்க்கட்சியான தி.மு.க. அதர்மத்தின் வழியில் அரசியல் செய்து அக்கிரமம் புரிந்து வருகிறது.
கொரோனா பரவலின் தொடக்கத்திலேயே சட்டமன்றத்தை நடத்தக்கூடாது, கொரோனா பரவி விடும் என்று பேரவையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அன்றைய தினமே வடசென்னையில் 2000 பேரோடு போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
அதுமட்டுமின்றி, கொரோனா பரவலின்போது டெல்லி மாநாடு செல்பவர்களுக்கு  அறிவுரை சொல்லி, தொற்றிலிருந்து காப்பாற்றாமல் பொள்ளாச்சி  நாடாளுமன்ற  தொகுதி திமுக எம்.பி.  உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து  உதவி  செய்வது  போல் நடித்து தொற்று பரவ காரணமாக இருந்தும், அதன் தொடர்ச்சியாக கோயம்பேடு  மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவிடச் செய்ததிலும், சிறுபான்மையின இஸ்லாமிய மக்கள் மீது  அவசியமற்ற கொரோனா பரவல் பழியை போடும் வகையில் இஸ்லாமிய மக்களை கொரோனா நோய் தொற்று காலத்திலும் திட்டமிட்டு போராட தூண்டியதும் ஸ்டாலின் தான். 

ஆனால், டெல்லி மாநாடு சென்று திரும்பியதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சகோதரர்களை தாயின் பரிவோடு அரவனைத்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ வசதி உட்பட அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, அவர்களையும், அவர்களது குடும்பத்தையும் பாதுகாத்தவர் மாண்புமிகு தமிழக முதல்வர்  அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தான். உலகமே வலியுறுத்தும் சமூக விலகலை மக்களிடையே வலியுறுத்துவதற்கு மாறாகவும், “வீட்டில் இரு, விலகி இரு, விழிப்பாய் இரு” என்கிற தமிழ்நாடு முதலமைச்சரின் அழைப்புக்கு நேர் எதிராகவும் “ஒன்றிணைவோம் வா” என்று, ஒவ்வாத வசனத்தைப் பேசியதோடு, மக்களுக்கு நிவாரணம் வழங்குகிற தன்னார்வலர்களும், தனவந்தர்களும், அரசின் மூலம் வழங்கலாம் அதன் மூலம் சமூக இடைவெளி குறையாத நிலையை பாதுகாப்போடு மேற்கொள்ளலாம் என தமிழக அரசு கொண்டுவந்த கட்டுப்பாட்டுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்கியதோடு, கண்டெய்ன்மெண்ட் ஜோன், ஹாட்ஸ்பாட் என நோய் பரவல் அதிகமுள்ள பகுதிகளாக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு வளையம் அமைத்த பகுதிகளுக்குச் சென்று நிவாரணம் வழங்குகிறோம் என்ற பெயரிலே மக்களிடையே கொரோனாவை பரப்பி இன்றைக்கு ஒட்டுமொத்த சென்னை மக்களின் நிம்மதியை கெடுத்ததும், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் செல்வோரால் பல மாவட்டங்களில் மீண்டும் நோய்த்தொற்று பரவும் அபாயத்திற்கும் காரணமே கொரோனாவை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் ஸ்டாலினின் அதிகார வெறி தான்.

அபவாதம் செய்து “ஒன்றிணைவோம் வா” என அரசுக்கு எதிராக தன் கட்சியினரை தூண்டி விட்டு ஸ்டாலின் நடத்திய அத்துமீறல்களால்தான் இன்று அவரது கட்சியை சார்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரையே கொரோனாவுக்கு பலிகொடுக்க வேண்டிய பரிதாபம் நிகழ்ந்ததோடு, இன்னும் பலருக்கு கொரோனா பரவிடவும் காரணமாகி விட்டது.புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் வாழும் காலத்தில் அறுதியிட்டு, உறுதிபட சொன்னதுபோல் மு.க.ஸ்டாலினிடம் குவிந்துகிடக்கும் ஒரு லட்சம் கோடிக்கும் மேலான கொள்ளை பணத்தை கொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்து விடலாம். மேலும், அதன் தலைமையும், ஏழைகளுக்கு கொடுத்ததாக சொல்லப்படும் சொற்ப நிவாரணத்தைக் கூட சென்னையில் உள்ள பாண்டிபஜாரின் பல பகுதிகளிலும் உள்ள வணிக நிறுவனங்களிடம் மிரட்டி வசூலித்தே வழங்கியிருக்கிறார்கள் என்பதெல்லாம் இப்போது அம்பலத்திற்கு வந்து சந்தி சிரிக்கிறது. இவ்விவரங்களையெல்லாம் திமுகவை காறித் துப்பிவிட்டு  அக்கட்சியிலிருந்து விலகியிருக்கும், மூத்த திமுக பிரமுகரும், முன்னாள் விவசாய அணி செயலாளருமான கே.பி.ராமலிங்கம் அம்பலப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர தெரிவித்துள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios