அரசியல் பரபரப்பின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் செந்தில்பாலாஜிக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை ‘விஜயபாஸ்கர்!’ என்பதுதான். டாக்டர் வி.பா. இல்லை, இவர் கரூர் எம்.எல்.ஏ.வும் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர். 

காரணம்?....அதை சமீபத்தில் கரூரில் வைத்து டி.டி.வி. தினகரனே சொல்லியிருக்கிறார் இப்படி “செந்தில்பாலாஜி அமைச்சராகவும், கரூர் மாவட்ட செயலாளராகவும் வலம் வந்தபோது அவருக்கு கார் கதவை திறந்துவிட்டபடி, கையில் மஞ்சள் பையுடன் அலைந்தவர்தான் விஜயபாஸ்கர். ஆனால் காலக்கிரகம் அவரெல்லாம் இன்று அமைச்சராக வலம் வருகிறார்.” என்பதே. இப்போது புரிகிறதா செ.பா.வுக்கு வி.பா. மீது உள்ள கோபமும், எரிச்சலும்.

 

கரூர் மாவட்ட அரசியலில் இவர்கள் இருவருக்கும் இடையிலான உரசல்தான் பெரும் பரபரப்பாய்ப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், இதோ தி.மு.க.வுக்கு தாவப்போகிறார் செந்தில்பாலாஜி என்று பரபரப்புகள் றெக்கை கட்டியுள்ளன. இந்நிலையில் தினகரனின் அ.ம.மு.க.வில் இருந்து விலகி, அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தனர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர். இவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் “ தி.மு.க.விலிருந்து வந்தவர்தான் செந்தில்பாலாஜி. மறுபடியும் அங்கேயே போகப்போறதா தகவல் வருதுங்க. சரி, எப்படியிருந்தாலும் அந்த கட்சியோட கடைசி பெட்டியிலதான் ஏறணும். 

நான் ஒருவருஷத்துக்கு முன்னாடியே சொன்னேனுங்க, தினகரனையும் கூடவே பதினேழு  எம்.எல்.ஏ.க்களையும் இந்தாளு செந்தில்பாலாஜி நடுத்தெருவில் நிறுத்துவிட்டார்ன்னு. அது என்னைக்கோ உண்மையாகிடுச்சு, இப்போ என்னடான்னா நடுத்தெருவில் அவங்களை நிறுத்திட்டு இவரு வேற கட்சிக்கு தாவுறார். அதுவும் நம் அம்மாவால் ‘நிரந்தர எதிரி’ அப்படின்னு வெறுக்கப்பட்ட தி.மு.க.வுக்கு தாவுறார். அப்படின்னா இவருடைய விசுவாசம் எந்தளவுக்கு இருக்குதுன்னு தெரிஞ்சுக்குங்க. 

பதவிக்காக என்ன வேணா பண்ணுவார். அட தமிழ்நாட்டுல மட்டுமில்லைங்க, ஆந்திராவில் யாராச்சும் இவருக்கு அமைச்சர் பதவி தர்றேன்னு சொன்னால் கூட அங்கேயும் ஓடிப்போயிடுவார். இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாட்களில் தினகரன் கூடாரத்தில் இருந்து எல்லாரும் வெளியேறி, தாய்க்கழகமான அ.தி.மு.க.வில் இணையப்போறாங்க. மொத்தமாக கூடாரம் அங்கே காலியாக போகுது. திரும்பி வரும் அத்தனை பேருக்கும் முழுமையான அன்பும், மரியாதையும் வழங்கப்படும்.” என்று கெத்து காட்டியிருக்கிறார். 

இந்த தகவல் சுடச்சுட செந்தில்பாலாஜியின் செவிகளுக்குப் போக, மனிதர் நறநறவென பல்லைக் கடித்திருக்கிறாராம். செந்தில் பாலாஜி அடுத்து ஏறப்போகும் அரசியல் மேடையில் யாரை வறுக்கிறாரோ இல்லையோ அமைச்சர் விஜயபாஸ்கரை தாறுமாறாக தாளித்தெடுப்பார், ஒருவேளை தி.மு.க.வில் இணைந்துவிட்டார் என்றால் விஜயபாஸ்கரின் சமீபத்திய சொத்து வளர்ச்சியை ஆதாரத்தோடு போட்டுத் தாக்கவும் செந்தில்பாலாஜி மறக்க மாட்டார்! என்கிறார்கள் செ.பா.வின் ஆதரவாளிகள். எப்டியோ நமக்கு செம்ம ட்ரீட் இருக்குது!