ஓட்டு போட்டுவிட்டு பொங்கல் பரிசு வாங்கிக்கொள்ளுங்கள் கரூரில் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது சர்ச்சையானது.  
ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக டிச 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, ஒரு மாதத்துக்கு முன்பகவே பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார். தேர்தலுக்கு முன்பெ தொடங்கிய திட்டம் என்பதால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தடை இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 9 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கிராமப்புறங்களில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கரூர் ஊரகப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 
அப்போது அவர் பேசுகையில், “கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் 1000 ரூபாய் வழங்க இருந்தோம். ஆனால், திமுக நீதிமன்றம் சென்றதால் வழங்க முடியவில்லை. வழக்கமாக பொங்கல் பரிசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவீர்கள். இந்த முறை ஓட்டு போட்டுவிட்டு பொங்கல் பரிசை வாங்கிக்கொள்ளுங்கள்” என எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார். தேர்தல் வாக்குக்கு பரிசு கொடுப்பதுபோல அவருடைய பேச்சு அமைந்துள்ளதால் தற்போது அது சர்ச்சையாகி உள்ளது.