minister kamaraj speech against OPS and Madhusoodhanan

அதிமுகவில் ஓ.பி.எஸ். மற்றும சசிகலா என இரு அணிகள் உள்ளன. இரு அணிகளும் எதிரும் புதிருமாக பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசி வருகிறார்கள். தற்போது, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் இரு அணிகளும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றன.

குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கூறி வருகிறார்.

இந்நிலையில, ஆர்கே நகர் இடை தேர்தலுக்காக டி.டி.வி.தினகரனை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது:-

கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி ஜெயலலிதா, மெட்ரோ ரயில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர், அப்போது கொடியசைத்து துவக்கி வைத்தார். வழக்கமாக கொடியை 3 முறை அசைப்பது வழக்கம்.

ஆனால், அன்றைய நாளில் 2 முறை மட்டுமே கொடியை அசைத்தார். அதன்பின், அப்படியே உட்கார்ந்துவிட்டார். அவர் சோர்வாக காணப்பட்டார். அவரிடம் யாரும், அதை பற்றி கேட்க முடியாது.

பின்னர், வீட்டுக்கு போகலாம் என கூறினார். இதையடுத்து நானும், மற்ற அமைச்சர்களும் எங்கள் பணிகளை கவனிக்க சென்றுவிட்டோம். அடுத்த நாள் 22ம் தேதி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

11 நாட்களுக்கு பின் ஜெயலலிதா, தலைமை செயற்குழுவை சந்தித்தாரா இல்லையா..? இதற்கு ஓ.பி.எஸ். இல்லை என சொல்வாரா..? மதுசூதனனும் சொல்லட்டும். இல்லை. மதுசூதனனுக்கு ஞாபக மறதி அதிகம். அவருக்கு நினைவுக்கு வராது. அவருக்கு தெரிய வாய்ப்பும் இல்லை.

ஜெயலலிதா சந்தித்ததை, மனசாட்சியை தொட்டு ஓ.பன்னீர்செல்வம் பேசட்டும். அவர், இங்கு வந்து உங்களிடம் ஓட்டு கேட்கட்டும். நாங்கள், அவர் பின்னால் செல்கிறோம்.

ஆனால், அதை மறந்ததுபோல் நடித்து, ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக உங்களிடம் ஓட்டு கேட்கிறார். ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் பண்ணலாமா..?

திமுகவினர் ஆயிரம் சொல்வார்கள். அவது அவர்களின் பிழைப்பு. வாடிக்கை. எதிர்க்கட்சியினர் அவர்கள். அதனால், அவர்கள் பேசுவார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலாவை பொது செயலாளராக வர வேண்டும் என்று சொன்னது மதுசூதனனும், பன்னீர்செல்வமும்தானே? முதலில் சசிகலா காலில் விழுந்தது யார்? பன்னீர்செல்வம்தானே? முதலமைச்சர் ஆனதும் சசிகலா காலில் விழுந்தார். பதவி போனதும் மிகப்பெரிய பொய்யைச் சொல்கிறார்.

ஜெயலலிதாவின் மரணம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அன்றைக்கு பன்னீர்செல்வம்தானே முதலமைச்சர். அவர்தானே அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.