’’சர்ச்சைக்குரிய காட்சிகளை ‘சர்கார்’ படக்குழுவினர் நீக்காவிட்டால், முதல்வர் எடப்பாடியுடன் கலந்தாலோசித்துவிட்டு படத்தின் மீது கடுமையான எடுக்கப்படும்’’ என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார். அமைச்சரின் வார்த்தைகள் மிகவும் கடுமையாக இருப்பதால் படத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறது அ.தி.மு.க.வட்டாரம்.

சற்றுமுன் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘படத்தின் கதைக்கு தேவைப்படாத நிலையிலும் உள்நோக்கங்களுடன் ‘சர்கார்’ படத்தில் ஏராளமான அரசியல் காட்சிகள் இருக்கின்றன. இது குறித்து நேற்று முதல் எனக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.  வளர்ந்து வரும் நடிகரான விஜய்க்கு இது தேவையில்லாத வேலை.

எனவே உடனடியாக படத்திலுள்ள சர்ச்சைக் காட்சிகளையும் வசனங்களையும் படக்குழுவினர் தாங்களே முன்வந்து நீக்கவேண்டும். அப்படி செய்யாவிட்டால், முதல்வரை சந்தித்து ஆலோசித்த பிறகு எடுக்கப்படும் நடவடிக்கை கடுமையாக இருக்கும்’ என்கிறார் கடம்பூர் ராஜு.

‘சர்கார்’ படத்தில் சித்தரிக்கப்பட்ட பெரும்பாலான பாத்திரங்கள் தி.மு.க.வின் முன்னணி தலைகளையே குறித்தாலும் படத்தின் சில முக்கியமான காட்சிகளும் வசனங்களும் ஆளும் கட்சியை நேரடியாகத் தாக்குகின்றன. குறிப்பாக அரசு மருத்துவமனை ஒன்றிற்கு விசிட் அடிக்கும் விஜய் தமிழக அரசின் அத்தனை துறைகளையும்  குறிப்பாக மருத்துவ துறையை கிழித்துத் தொங்கவிடுகிறார்.

இது ஆளுங்கட்சிக்கு பொறுக்குமா? இதோ பொங்கி எழுந்துவிட்டார்கள். கூடிய விரைவில் அமைச்சர்கள் சிலர் எடிட்டராக மாறி படத்தை நறுக்க முருகதாஸ் கோஷ்டி ஒத்துக்கொள்ளாவிட்டால் படத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.