கடந்த சில நாட்களாக ஸ்டாலினுக்கும், அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையில் யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது. இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டிருக்கின்றனர் விமர்சன வார்த்தைகளில். அதில் உச்சம் தொட்டுவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார். 
’எல்லா துறைகளை பற்றியும் அமைச்சர் ஜெயக்குமாரே பதில் தருகிறார். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பேசுவதை விட இவரே பேசுகிறார். இது அதிகப்பிரசங்கித்தனமாக உள்ளது. தன்னை சூப்பர் முதல்வர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.’ என்று ஸ்டாலின் போட்டுத் தாக்கினார் ஜெயக்குமாரை. இதை துரைமுருகனும் வழிமொழிந்து பேசினார். 


இதற்காக ஸ்டாலினை தொடர்ந்து வெச்சு செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். குறிப்பாக ஸ்டாலினை ‘அவர் ஒரு பேபி! எதுவுமே தெரியாத ஒரு நபராக இருப்பது வருத்தமா இருக்குது. அறுபது வயதுக்கு மேலே ஆகியும், துணை முதல்வர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் பதவிகளிலெல்லாம் இருந்துவிட்டு வந்தும் கூட விபரம் இல்லாமலே  இருக்கிறார்.’ என்று இரண்டு நாட்களுக்கு முன் ஒரு குட்டு வைத்தார். 
அந்த வலியே இன்னமும் ஸ்டாலினுக்கு தீரவில்லை. அதற்குள், இப்போது மீண்டும் ஒரு குட்டு வைத்துள்ளார். அதுவும், கமலின் தலையையும் சேர்த்து இதில் குட்டியுள்ளதுதான் ஹைலைட்டே.


சென்னை எண்ணூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற ஜெயக்குமார் “உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் ஸ்டாலின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். ஸ்டாலின் மட்டுமல்ல ஒட்டுமொத்த தி.மு.கவும் இப்போது குழப்பத்தில் உள்ளது. தேர்தலுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் வேண்டாம்! அப்படின்னு சொன்ன இவங்களே இப்ப அதை வேணுமுன்னு கேக்குறாங்க. 
‘தெனாலி’ படத்தில் நடிகர் கமல் எதற்கெடுத்தாலும் பயப்படுவது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதே போல் இப்போது ஸ்டாலின் எல்லாவற்றுக்கும் பயப்படுகிறார். 


சமீபத்தில் நடிகர் கமலை பார்த்துவிட்டு வந்த (கால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்திருந்த கமலை ஸ்டாலின் சென்று பார்த்து, நலம் விசாரித்தார்) ஸ்டாலினுக்கும் பயம் தொற்றிக் கொண்டது . அதனால்தான் தேர்தலை நடத்தவிடாமல், பல்வேறு முட்டுக்கட்டைகளை போடுகிறார் ஸ்டாலின்.” என்று ஏதோ கமலிடமிருந்து, ஸ்டாலினுக்கு ’பய நோய்’ தொற்றிக்கொண்டது போல் பேசி, தி.மு.க.வுக்கும், ம.நீ.ம.வுக்கும் கடுப்பை கிளப்பியிருக்கிறார் அமைச்சர். 
நல்லா வருவீங்க பாஸ்!