minister jayakumar very conscious when saying karunanidhi
தொலைக்காட்சி பெயரைக்கூட கலைஞர் என்று சொல்லாமல் மிகவும் கான்ஸியசாக கருணாநிதி என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு தேவையான அனைத்து பிரமாணப்பத்திரங்களையும் தாக்கல் செய்துவிட்டதாகவும் அதனால் இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் ஒதுக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதன்பின்னர், ஜெயா டிவியில், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகனின் பேட்டி ஒளிபரப்பானது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, அதிமுகவின் பரம எதிரி திமுக என்று சொல்லி சொல்லியே எங்களை ஜெயலலிதா வளர்த்திருக்கிறார். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்த துரைமுருகனின் பேட்டியை, ஜெயலலிதா கஷ்டப்பட்டு உருவாக்கிய ஜெயா டிவியில் ஒளிபரப்பியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
தினகரன் கோஷ்டியினர், திமுகவுடன் கைகோர்த்து செயல்படுகின்றனர் என்பதற்கு இதுவே சான்றாகும். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ”நமது எம்ஜிஆர்” பத்திரிகை “முரசொலி”யாக மாறிவிட்டது. அதேபோல, ”ஜெயா டிவி” கருணாநிதி டிவியாக மாறிவிட்டது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் அந்த வேளையில் கூட, “கலைஞர்”டிவி என ஜெயக்குமார் குறிப்பிடவில்லை. அந்த தொலைக்காட்சியின் பெயரே, “கலைஞர்” தொலைக்காட்சி என்றபோதிலும், மிகவும் கான்சியசாக, கலைஞர் என்று சொல்லாமல் கருணாநிதி என்று தெரிவித்தார் ஜெயக்குமார்.
திமுக தலைவர் கருணாநிதியை திமுகவினர் கலைஞர் என்ற புனைப்பெயரில் தான் அழைப்பர். திமுகவினர் மட்டுமல்லாது சாமானியர்களும் கூட கருணாநிதி என்று அவரது பெயரை சொல்வதைவிட கலைஞர் என்றுதான் அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
