காவிரி விவகாரத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தை 10 நாட்களாக முடக்கியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்காக இதுவரை இல்லாத அளவிற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. 10 நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறோம் என்றார்.

மேலும் கே.சி.பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, கட்சியின் அடிப்படை விதியை மீறியதால் நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை முடிவுகளை தன்னிச்சையாக யாரும் எடுக்க முடியாது.

கட்சியில் இருப்பவர்கள் அவர்களின் வரையறைக்குட்பட்டு தான் பேசவேண்டும். கட்சியின் கொள்கை முடிவுகளை கட்சி தலைமை தான் எடுக்க முடியும் என தெரிவித்தார்.