ஏக் துஜே கேலியே போன்ற பல இந்திப்படங்களில் நடித்து தனது இந்தி எதிர்ப்பை பதிவு செய்தவர்தான் கமலஹாசன் என அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்துள்ளார்.

நடிகர் கமலஹாசன், தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடப்பதாக சொன்னாலும் சொன்னார், அமைச்சர்களுக்கும், கமலுக்கும் இடையே பெரும் சொற்போரே நடைபெற்று வருகிறது.

கமலஹாசனை வன்கொடுமைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலுக்கு வந்துவிட்டு அரசியல் பேச வேண்டும் என்று பல முனைகளில் கமல் மீது அமைச்சர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இதே போன்று பாஜக மாநில தலைவர் தமிழிசை, எச்.ராஜா போன்றோரும் கமலுக்கு எதிராக கடுமையாக பேசி வருகின்றனர்.

இதற்கு பதிலடி  அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட கமலஹாசன், அமைச்சர் ஜெயகுமார்,  எச்.ராஜா போன்றரை தாக்கியுள்ளார்.

இந்தி எதிர்ப்பு குரல் கொடுத்தபோதே தான் அரசியலுக்கு வந்ததுவிட்டதாகவும், இது குறித்து தம்பி ஜெயகுமார், எச்.ராஜா போன்றோர் தனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை என கமலஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீட் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்க டெல்லி செல்லும் அமைச்சர் ஜெயகுமார், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இந்தி எதிர்ப்பு வீரர் கமலஹாசன் என கிண்ட்ல் செய்தார். ஏக் துஜே கேலியே போன்ற பல இந்திப்படங்களில் நடித்து, தனது இந்தி எதிர்ப்பைச் காட்டியவர்தான் கமல் என்றும் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டினார்.

தற்போது கமலஹாசன் யாருடைய ஊதுகுழலாகவோ செய்லபட்டு வருகிறார் என்றும் இப்பிரச்சனையில் கமல், ஸ்டாலின், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணி வைத்துள்ளனர் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.