அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெளிவில்லாமல் இருக்கிறார். அமமுகவினருடன் நமக்கு எந்த உறவும் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி; சசிகலா விடுதலையாகி வெளியே வந்த பிறகு, திமுகவுக்குச் சாதகமான எந்த முடிவையும் எடுக்க மாட்டார். அதிமுகவுக்கு பலம் கொடுக்கும் முடிவைத்தான் சசிகலா எடுப்பார். தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. 

தாய் இல்லாத நேரத்தில் அண்ணன், தம்பிகளுக்குள் சண்டை நடப்பது இயல்பு. நல்ல நிகழ்ச்சிகள் வரும்போது வேற்றுமையை மறந்து ஒன்றுசேர்ந்துவிடுவார்கள். அதுபோலத்தான், அதிமுக - அமமுக இடையில் நடப்பது பங்காளிச் சண்டை. தேர்தல் வரும்போது, இணையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. ஏதும் விபரீதமாக நடக்க வாய்ப்பில்லை என்றார். இவரது பேச்சுக்கு  அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ராஜேந்திர பாலாஜி தெளிவில்லாமல் இருக்கிறார். அமமுகவினருடன் நமக்கு எந்த உறவும் கிடையாது. இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்ற அமமுகவினர் நமக்கு தம்பியா? என கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதை எல்லாம் கட்சி தலைமை பார்த்துகொண்டு தான் இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.