எப்படி இருந்த திமுக இப்படி ஆகிடுச்சு என்று நடிகர் விவேக் பாணியில் திமுகவை கிண்டலடித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.


ராஜாஜியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவருடைய சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாபா பாண்டியராஜன் ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து திமுக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது பற்றி கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “ஸ்டாலின் ஒரு குழப்பவாதி.  2016ல் உள்ளாட்சித்தேர்தலை எதிர்த்து திமுக வழக்குப்போட்டது. அந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. அதை ஏற்று திமுக தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். ஆனால், அதை எதிர்த்து திமுக வழக்கு போட்டது. அந்த வழக்கில் தீர்ப்பு வந்தபோது, அதை வரவேற்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், இப்போது உள்ளாட்சித் தேர்தலில் முன்னுக்கு முரணாகப் பேசிவருகிறார்.
மு.க. ஸ்டாலின் பெரிய பகுத்தறிவுவாதி என்று சொல்கிறார். அவுங்க அப்பா (கருணாநிதி) இருந்தவரைக்கும் திமுக கூட்டத்தை அண்ணா அறிவாலயத்தில்தான் நடத்தினார். ஆனால், இப்போது பைவ் ஸ்டார் ஹோட்டலில் கூட்டம் நடத்துகிறார். எப்படி இருந்த திமுக இப்படி ஆகிடுச்சு” என்று கிண்டலடித்தார்.