Minister Jayakumar Pressmeet in Chennai

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு செயல்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்து வன்முறையில் இதுவரை பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பொதுமக்களின் வீடுகளுக்கு போலீசார் நுழைந்ததாகவும், அவர்கள் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினர். ஆளும் தரப்பில் இருந்து யாரும் தூத்துக்குடிக்கு செல்லவில்லை. இந்த நிலையில், விரைவில் தூத்துக்குடி செல்ல உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சரிடம், தூத்துக்குடி மக்களை ஏன் சந்திக்கவில்லை என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் விரைவில் சந்திப்போம் என்றார். எதிர்கட்சி தலைவர் எதிரி கட்சி தலைவராக இருக்கக் கூடாது.

வைகோ தனித்தமிழ்நாடு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார் என்றால் அது குறித்து மத்திய அரசுதான் கருத்தில் எடுத்துக் கொள்ளும் என்றார். தூத்துக்குடி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு செயல்படும் என்றார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் துண்டித்திருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.