கடலில் கரைத்த பெருங்காயம் போல அமமுகவின் நிலை உள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தினகரனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

காயிதே மில்லத்தின் 124-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,  திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், சேவூர் ராமச்சந்திரன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும். ஜெயலலிதா  மீது பக்தி கொண்டவர்கள், உடனடியாக அதிமுகவுக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும். அமமுகவிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். இன்னும் இணைவார்கள் என்றார். தற்போது லெட்டர் பேட் கட்சியான அமமுக கடலில் கரைந்த பெருங்காயமாவிட்டது. 

குடும்பத்தில் உள்ள வெற்றிடத்தை தான் மு.க.ஸ்டாலின் நிரப்பியுள்ளார். ஆனால் தமிழக அரசியல் வெற்றிடத்தை அவர் நிரப்பவில்லை. ஜெயலலிதாவின் வெற்றிடத்தை அதிமுக நிரப்பும். முதல்வர் எடப்பாடிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.