அதிமுக தேர்தல் அறிக்கைதான் உண்மை ஹீரோ, ஹீரோயின் போன்ற என்றும் திமுக தேர்தல் அறிக்கை உதவாக்கரையான தேர்தல் அறிக்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

மக்களவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்;- " அதிமுக அனைத்துக் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்பதை மறக்க வேண்டாம் என ஜெயக்குமார் கூறினார். 

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என நாங்கள் கூறுகிறோம். ஆனால், திமுக, இணை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் எனக் கூறுகிறது. தமிழர்கள் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள் அதிமுகவினர்தான். இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் தி.மு.க. - காங்கிரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம். 

திமுக தேர்தல் அறிக்கை அரைவேக்காட்டுத் தனமானது. உதவாக்கரை அறிக்கையாக உள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை தான் உண்மையான ஹீரோ, ஹீரோயின் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.