சாத்தான் குளத்துக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இல்லாமல் சென்றது 420 செயல் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர்.  இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில் போலீஸார் இருவரையும் கடுமையாக தாக்கியதே அவர்கள் உயிரிழக்க காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


இந்நிலையில் தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி, நேரடியாக ஜெயராஜ் வீட்டுக்கு வந்து, ஆறுதல் கூறி, அவரிடம் திமுக அறிவித்த 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதனையடுத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் தூத்துக்குடிக்கு சென்று ஜெயராஜ் - பெனிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் தூத்துக்குடிக்கு சென்றதாக அமைச்சர் ஜெயக்குமார் புகார் கூறினார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.


இந்தக் குற்றச்சாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் மூலம் பதில் அளித்தார். அதில், “‘மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தூத்துகுடிக்கு இ-பாஸ் மூலம்தான் சென்றார் என்றால், அதை ஏன் ட்விட்டரில் அவர் வெளியிடவில்லை? தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதயநிதிக்கு இசைவே கொடுக்கவில்லை. அவர் ஒரு கட்சி தலைவரின் மகன். ஆனால், அவர் செய்தது 420 வேலை. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை  செய்யும்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.