சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பெயரளவுக்குதான் பட்டியல் இனத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும். திமுகவின் கட்சி பதவிகளில் பட்டியலினத்தவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. திமுக பொதுக்குழுவை காணொலி காட்சி மூலம் நடத்தி முடித்திருக்கிறார்கள். திமுகவில் குழப்பங்கள் அதிகம். அதனால்தான் காணொலி காட்சி மூலம் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால், அதையும் அவர்கள் பெருமைபடுத்தி பேசிக்கொள்கிறார்கள். உண்மையில் திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நடைபெறாமல் இருந்திருந்தால் பொதுக்குழு கூட்டத்தில் நாற்காலிகள் பறந்திருக்கும். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதிமுகவின் அடித்தளம் வலுவாக உள்ளது.எனவே 2021-ம் ஆண்டிலும் அதிமுக  பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்” என ஜெயக்குமார் தெரிவித்தார்.