*    முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்கள் இல்லாத தமிழகத்தில், வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்? என்ற கேள்விக்கு இந்த தேர்தல் முடிவுகள் நிச்சயம் விடை சொல்லும். சமூக நீதி கொள்கைகளை தி.மு.க. தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது: திருமாவளவன். 
(அதாவது ஸ்டாலினை சீண்டுன மாதிரியும்  இருக்கணும், சிறப்பிச்ச மாதிரியும் இருக்கணும் அப்படிங்கிற எண்ணத்துலேயே பேசுற பேச்சா இருக்குதே திருமாண்ணே! கருணாநிதி  இடத்துல ஸ்டாலின்னு சொல்லவும் மனசு வரல, அவர் இடத்துல இவர் இல்லைன்னு சொல்லவும் தகிரியம் வர்ல!)

*    படிப்படியாக முன்னேறி, அடித்தட்டிலுள்ள மனிதரும் முன்னேறலாம் என்பதற்கு உதாரணம் கருணாநிதி. எலும்பூர் ரயில் நிலையத்துக்கு அவரது பெயரை வைக்க வேண்டும்! எனும் முன்னாள் மத்தியமைச்சர் அழகிரியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் நாங்கள் வருத்தப்பட மாட்டோம்: ராஜேந்திர பாலாஜி
(இப்படி சுத்தி வளைச்சு சுண்ணாம்பு அடிக்கிறதுக்கு பதிலா...அழகிரியண்ணே, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள்ள உங்காளுங்களை எங்களுக்கு ஆதரவா ஓட்டு போட சொல்லுங்க, நம்ம பொது எதிரி ஸ்டாலினுக்கு ஆப்பு வைப்போம்!ன்னு ஸ்ட்ரெய்ட்டா செப்பியிருக்கலாம் ரா.பா.)

*    ஆளுங்கட்சியினர் என்னதான் நலத்திட்ட உதவி! எனும் பெயரில் மக்களுக்கு பணம் கொடுத்தாலும், மக்கள் என்னவோ எங்களுக்குதான் ஓட்டு போடுவார்கள். மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான்: திருச்சி சிவா. 
(ஆமாமா, டெல்லியில போயி உட்கார்ந்து மக்களுக்கு எந்தளவுக்கு நீங்க நல்லது செஞ்சீங்கன்னு போட்டோ ஆதாரமே வந்துச்சே தல!)

*    பெருத்த அவமானத்தை சந்தித்துள்ள தே.மு.தி.க.வினர், நிச்சயம் வாழ்நாளில் தி.மு.க. பக்கம் திரும்ப மாட்டார்கள் என்று கருதுகிறேன்: ஜெயக்குமார். 
(அட போங்கண்ணே....அந்தம்மா, உங்க புரட்சித்தலைவியை பத்தி அப்படி பேசியும், நீங்க ‘மறப்போம்! மன்னிப்போம்!’ன்னு டயலாக் அடிச்சுட்டு கூட்டு போட்டிருக்கிங்க. இதைவிட தி.மு.க.ட்ட தே.மு.தி.க. கேவலமடைஞ்சுடுச்சு?)

*    இருண்ட தமிழகத்துக்கு வெளிச்சம் தரவேண்டும்! என்ற பார்வையில், கமல் அரசியலுக்கு வந்துள்ளார். அதனாலேயே அவருக்கு டார்ச் லைட் சின்னம் கிடைத்துள்ளது. யாரும், யாரையும் சாதாரணமாக எடை  போடக்கூடாது: கருணாஸ். 
(என்ன கொமாரு, திடீர்ன்னு புல்யெல்லாம் புல்வெளி பக்கமா மேயப்போவுது?)