இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கும்  விவகாரத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கிணறு வெட்ட பூதம் கிளம்பும் கதையாக புது புது தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. 

தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லி அகியோர் கைதை தொடர்ந்து மேலும் பலரிடம் விசாரனையை தீவிரப்படுத்த டெல்லி போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

அந்த வகையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் தொடர்பாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவரும் சிக்குவார் என்று கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மூத்த அமைச்சர்கள் எரிச்சல் அடையும் வகையில் ஆட்டம் போட்டவர் இவர் என்பது குறிப்பிடதக்கது.

அந்த அமைச்சர் மட்டுமின்றி தமிழக தொலைகாட்சிகளில் சில வருடங்களாக மிக பிரபலமடைந்த விவாத பேச்சாளர் ஒருவரும் சிக்குவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காரணம் இந்த பேச்சாளர்தான் சுகேஷ் சந்திரசேகரை மல்லிக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்கின்றனர்.

மேலும் பெங்களூரை சேர்ந்த பைசல் என்னும் பவர் புரோக்கரையும் தீவிரமாக விசாரிக்க  டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளதால் மேலும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஜனார்த்தனன் என்னும் ஜனா, மல்லி எனும் மல்லிகார்ஜுனா, எம்பி என அழைக்கபடும் டிடிவி தினகரன் ஆகியோர் பவர் புரோக்கர் சுகேஷ் என்பவரிடம் தொலைபேசியில் பேசி வசமாக சிக்கி கொண்டதால் அவர்கள் மீதான நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மேலும் சில அமைச்சர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் இதில் தொடர்புடையவர்களாக இருப்பதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு அதிமுகவை தொற்றி கொண்டுள்ளது.