புயல் பாதித்த பகுதிகளில் விமானம் மூலம் மின்கம்பங்கள் நட வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.  

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்கம்பங்கள் நடும் பனி போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயலால் முற்றிலும் உருக்குலைந்து போன நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வினியோகிப்பதற்காக மின் கம்பங்கள் நடும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர். 

பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டத்தில் பேசும் போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது சாத்தியமில்லை என்று அவரது காதில் ஊதினார். ஆனால் குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான், கடலுக்கு அடியில் நகரத்தையே நிர்மாணிக்கிறான். நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என கேட்டார். இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டது அதிகாரிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அமைச்சர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் பேசி வருகின்றனர். ஒரு பொறுப்புள்ள அமைச்சர் இப்படி முறையற்ற முறையில் பேசுவது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திண்டுக்கல் சீனிவாசனை இந்த கருத்து தொடர்பாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்து வருகின்றனர்.