ஜெயலலிதா இறந்தது முதல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை,மானாவாரியா மனுஷன் உளறித் தள்ளுகிறார்.  அம்மா இட்லி சாப்பிட்டாங்க.. உப்புமா தின்னாங்க... ஜூஸ் குடிச்சாங்க...னு சொன்னதெல்லாம் பொய் மக்களே.. மன்னிச்சுடுங்க என்று என்றைக்கு கையெடுத்து கும்பிட்டு கும்பிட்டாரோ அது முதல் அடிக்கடி ஒரே உளறல் தான்.

ராகுல்காந்தியை மோடியின் பேரன் என்றார். பிரதமர் மோடி தாக்கல் செய்த பட்ஜெட் என்பதற்குப் பதிலாக இறந்த  வாஜ்பாய் பெயரை சொல்லி கலகலக்க வைத்தவர், மற்றொரு தடவை பிரதமர் மன்மோகன் சிங் என்று உளறினார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் ஜோதிமுத்துவை ஆதரித்து ராமதாஸ் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டம் கன்னிவாடியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார். அப்போது பின்புறமிருந்து ஒருவர் சிக்கினால் கொடுக்க, மாம்பழம் சின்னம் என்று திருத்திப் பேசினார்.

அப்போது மேடையில் இருந்த பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், திண்டுக்கல் சீனிவாசன் சின்னத்தை மாற்றிப் பேசியதை சரியாக கவனிக்கவில்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டவுடன், தன் அருகிலிருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் என்னவென்று கேட்க, திண்டுக்கல் சீனிவாசன் சின்னத்தை மாற்றிக் கூறியதை எடுத்துக் கூறினார். அதற்கு ஓ அப்படியா? என்று திகிலுடன் சிரித்தார்.

இந்நிலையில் நேற்று பிரசாரம் பண்ணிய  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாமக. வேட்பாளர் ஜோதி முத்துவுக்கு பதிலாக 'சோலைமுத்து' என்று உளறியுள்ளார். இதை கேட்டதும் வேட்பாளர் அதிர்ச்சியடைந்து அமைச்சரை திரும்பி பார்த்தார். பின்னர் பெயரை கேட்டு கொண்டு ஜோதிமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்றார்.

இதனை தொடர்ந்து இந்தியாவில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் பட்டியலை சொன்னார். அப்போது மம்தா பானர்ஜி, சரத்பவார் என்பதற்கு பதிலாக  சரத்குமார் என்றார். இதனால் கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.  

அதன் பிறகு நடந்த பல பிரசார கூட்டங்களிலும் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். இறுதி கட்ட பிரசாரத்திலும் வேட்பாளர் பெயரை மாற்றி கூறியதோடு மட்டுமின்றி நடிகர்கள் பெயரையும் சேர்த்து கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.