யாராவது எழுதி தருவதை சொல்வதுதான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வேலை அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என சட்டத்துறை அமைச்சர். சி.வி.சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். சி.வி.சண்முகம் முதல்வர் வெளிநாட்டு பயணம் நல்ல ஆக்கப்பூர்வமான பயணம். ஒரு அரசுக்கு உள்நாட்டு முதலீடுகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீடுகளும் தேவை. நாம் அவர்களை நாடி சென்று தமிழகத்தில் நிலையை எடுத்து சொல்லி, படித்த மாணவர்கள் இருக்கிறார்கள், இந்தியாவில் அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்பதையெல்லாம் எடுத்துக்கூறினால்தான் அவர்கள் இங்கு முதலீடு செய்ய வாய்ப்பு உருவாகும். 

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை கவர தீவிரமாக செயல்பட்டு வரும் முதல்வரை  பாராட்ட மனமில்லாமல் பொறாமையால் ஸ்டாலின் பொங்கி வழிகிறார். யாராவது எழுதி தருவதை சொல்வதுதான் ஸ்டாலினுக்கு வேலை அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என சிவி சண்முகம் தெரிவித்தார். 

மேலும், 7 பேர் விடுதலையில் முதலில் முயற்சி எடுத்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். இன்று, திமுக  நீலி கண்ணீர் வடிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவோம். மேலும், பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளார். தீர்ப்புகளை தமிழில் மொழி மாற்றம் செய்வதற்கான சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.