பிறந்தநாள் வணக்கங்கள் அம்மா!., -    என்று ஜெயலலிதாவை அ.தி.மு.க.வினர் வணங்கும் அதே வேளையில் அவர்களால் எம்.ஜி.ஆர். பற்றி சிந்திக்காமல் இருக்கவே முடியாது. காரணம்? அந்த புரட்சித் தலைவர் இல்லையென்றால், இந்த புரட்சித் தலைவி ஏது? அந்த ‘வாத்தியார்’ இல்லையென்றால் இந்த ‘அம்மா’ ஏது? என்பதுதான் அவர்கள் சொல்லும் நியாயமான காரணங்கள். 

ஜெ.,வுக்கும் எம்.ஜி.ஆர்-க்கும் இடையிலிருந்த ஆழமான பந்தத்தை உலகமறியும். இவர்களுக்கும் இடையிலான சுவாரஸ்ய சம்பவங்கள் ஆயிரமாயிரம். அவை புதிது புதிதாக அவ்வப்போது வெளிவரும். இருவரும் சந்தோஷித்து வாழ்வை நகர்த்திய காலத்தில் அவர்களின் நெருக்கத்தில் இருந்து அவர்களை கவனித்த நபர்கள் இதை  நினைவுபடுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள்.  

அந்தவகையில் ஜெ.,வின் பிறந்த நாளான இன்று அவர்கள் இருவரின் நட்பு வட்டாரத்தில் இருந்தவர்களின் முக்கியமானவரான இலக்கியவாதி இந்துமதி கூறுகையில்....”அம்முவுக்கும், எனக்கும் இடையில் இருந்த நட்பை கண்டு ரொம்பவே சந்தோஷப்பட்டார் எம்.ஜி.ஆர். நான் அம்முவுக்கு மிக பாதுகாப்பாக இருப்பதாக அவர் உணர்ந்தார். எல்லோரும் சொல்வது போல் அம்முவுக்கு, எம்.ஜி.ஆர். வெறும் சினிமா மற்றும் ரியல் லைஃப் ஹீரோ மட்டுமல்ல, சில நேரங்களில் அவரது தந்தை ஸ்தானத்திலும், தாய் ஸ்தானத்திலும் கூட இருந்தவர். 

சிம்பிளாக ஒன்று சொல்கிறேன்...ஜெயலலிதாவின் அம்மா சந்தியா இறந்துவிட்டார். போயஸின் பிரம்மாண்ட இல்லத்தில் தனி மரமாக உடைந்து நின்றார் ஜெ., அப்போது ஒரு தந்தை போல் நின்று பல வகைகளில் அவருக்கு வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர். அதிலும், ‘அம்மு, சாவிக்கொத்தை எடுத்து இடுப்புல சொருகு. மாடி, அறை எல்லாத்தையும் பூட்டு.’ என்று அவர் இட்ட கட்டளைகள் ஜெயலலிதாவின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு பெரிய வழிகாட்டியாக அமைந்தன. ஜெயலலிதாவும் அந்தளவுக்கு உலகம் அறியா பிள்ளையாகத்தான் இருந்தார். 

ஜெயலலிதா ஒரு பத்திரிக்கை அதிபராகவும், நான் அதில் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் எண்ணம். இதற்காக  ராயப்பேட்டையில் அன்றைய அஜந்தா ஹோட்டல் அருகே பெரிய கட்டிடம் ஒன்றை அலுவலமாக தேர்வு செய்தேன். ஜெ.,வும் அதை வந்து பார்த்து சந்தோஷப்பட்டார், எம்.ஜி.ஆர்-க்கும் அது பிடித்திருந்தது. ஆனால் அந்த திட்டம் கைகூடவில்லை. 

‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாடகம்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கான அடித்தளம். இந்த நாடக அரங்கேற்றத்தின் பின், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக ஊர், ஊராக செல்ல வேண்டிய பணி ஜெயலலிதாவின் தோள்களில் விழுந்தது. அதை திறம்படச் செய்தார் ஜெயலலிதா. அம்முவுக்குள் அசாத்திய கலைஞானமும், நிர்வாகத் திறமையும், எதிலும் வெற்றி பெறுவதில் பிடிவாத குணமும் இருந்தது. ஆனால் அவற்றைக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இதனாலும்தான்  எம்.ஜி.ஆர். மீது அம்முவுக்கு அளவு கடந்த, விவரிப்பை தாண்டிய அன்பும், மரியாதை, சிறு அச்சம், பெரும் பாசம் எல்லாமே இருந்தது.” என்கிறார். அம்மு அம்மா பற்றிய வரலாற்றின் சிறு பாராவை எழுதினாலும் அதில் எம்.ஜி.ஆரை நினைவுகூறாமல் விடவே முடியாது என்பதே நிதர்சனம்.