எம்.ஜி.ஆர். நிறைவு நூற்றாண்டு விழாவில், அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர். பாடல்களைப் பாடி அசத்தினார். அவர் பாடிய பாடலுக்கு பரிசாக ரசிகர்கள் ஆயிரம் ரூபாய் அளித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் உள்ள 31 மாவட்டங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று பிற்பகல் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

 

இதையொட்டி ஒய்எம்சிஏ திடலில், எம்ஜிஆரின் சாதனைகள், மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள் செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிது. இந்தக் கண்காட்சியை துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சியை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். விழாவில், லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினரின் இன்னிசை கச்சேரி நடத்தப்பட்டு வருகிறது. இசைக்குழுவை நடத்தும் லஷ்மணுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அப்போது லஷ்மண், அமைச்ச்ர ஜெயக்குமாரிடம், ஒரு பாடல் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

அவரது வேண்டுகோளுக்கிணங்க, அமைச்சர் ஜெயக்குமார், அழகிய தமிழ் மகள் இவள் என்ற பாடலைப் பாடினார். அவரது பாட்டுக்கு மிகுந்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும், பாடல்கள் பாட வேண்டும் என்று கூட்டத்தில் இருந்தோர் வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ என்ற பாடலை அமைச்சர் பாடினார். இரண்டு பாடல்களைப் பாடியபோதும் மேலும் பாடல்களைப் பாட வேண்டும் என்று மக்கள் வற்புறுத்தி வந்தனர்.

பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா மேடைக்கு வந்து, அமைச்சர் என்னுடன் பாட வேண்டும் என்று கேட்டார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற பாடலைப் பாடினர். முன்னதாக பாடல் பாடும் முன்பு, தவறாக பாடினால் மன்னித்துக்கொள்ளவும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார். மேடையில் பாடிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு ரசிகர்கள் சார்பில் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.