கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக மைசூரு அருகே உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் மற்றும் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், அவற்றில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது. இதன் மூலம் 65-வது முறையாக 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 2 லட்சத்து பத்தாயிரம் கன அடியாக உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், காவிரி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 

அதன்படி இன்று சேலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் தண்ணீரை திறந்துவிட்டார். அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து காவிரி ஆற்றில் சென்றபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர், மேட்டூர் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், டெல்டா பகுதியில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்றும், கால்வாய் பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்றும் குறிப்பிட்டார். 

மேட்டூர் அணை திறக்கப்பட்டிருப்பதால் நாமக்கல் பள்ளிபாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.