கோவை  மாவட்டம் மேட்டுப்பபாளையத்தை அடுத்த  நடூர் கிராமத்தில் ,  வீடுகள் இடிந்து மிகப்பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, இன்று அதிகாலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் மூன்று வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் குரு, ராம்நாத், ஆனந்த்குமார், ஹரிசுதா, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, வைதேகி, திலகவதி, அருக்காணி, ருக்மணி, நிவேதா, சின்னம்மாள் மற்றும் சிறுமி அக்ஷயா, சிறுவன் லோகுராம் உள்பட 17 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

பலத்த மழை காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மேற்படி 17 பேரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல முதலமைச்சர் உடப்பாடி பழனிசாமி இன்று கோவை செல்கிறார்.