கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் - ஏடிக்காலனி பகுதியில் மழை காரணமாக தனியாருக்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் இருந்த 4 வீடுகளின் மீது விழுந்தது.. இதில் 4 வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகினர். 

உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  ஸ்டாலின் ,  உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திருந்தால் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் அலட்சியத்தால் சுவர் இடிந்துவிழுந்து, 17 பேர் உயிரிழந்துள்ளனர். 

இவர்களின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை; போராடியவர்கள் மீது தடியடி தாண்டவமாடி அராஜகம் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம் என குற்றம்சாட்டினார். அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.4 லட்சம் நிவாரணம் போதுமானதாக இருக்காது.

நிவாரணத்தொகையை மேலும் அதிகரித்தும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டது கண்துடைப்பாக கருதுகிறேன்.

உரிய வகையில் விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன் என ஸ்டாலின் தெரிவித்தார்.