Asianet News TamilAsianet News Tamil

உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய நீங்களே இப்படி செய்யலாமா? மத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் ராமதாஸ்..!

மேகதாது அணை விவகாரம் குறித்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் கூறியுள்ளனர். இவை அனைத்தும் கர்நாடகத்துக்கு ஆதரவான குரல்கள்தான்.

Mekedatu Dam cannot be built without the approval of Tamil Nadu.. ramadoss
Author
Tamil Nadu, First Published Jul 14, 2021, 3:45 PM IST

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகத்துக்குச் சாதகமாகச் செயல்படுகிறதோ? என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை என ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மேகதாது அணை விவகாரம் குறித்து, தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கோரிக்கையைத் தமிழகம் நிராகரித்துவிட்ட நிலையில், அவரது குரலை மத்திய அமைச்சர் எதிரொலிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Mekedatu Dam cannot be built without the approval of Tamil Nadu.. ramadoss

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரம் குறித்து, இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும், தமிழக முதல்வருக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்கக் கூடாது என்றும், கர்நாடகத்துடன் மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், நான் வலியுறுத்தி இருந்தேன். அதைத் தொடர்ந்து, அண்மையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Mekedatu Dam cannot be built without the approval of Tamil Nadu.. ramadoss

ஆனால், கர்நாடகத் தலைநகரம் பெங்களூருவில் நேற்று (ஜூலை 13) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஷெகாவத், 'மேகதாது சிக்கலை இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்க்க வேண்டும். கர்நாடகத்தின் நீர்ப்பாசன திட்டங்களை ஆய்வு செய்து அம்மாநிலத்துக்கு மத்திய அரசு நீதி வழங்கும்' என்று கூறியிருக்கிறார். மத்திய அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, 'மேகதாது அணையைக் கட்டியே தீருவோம். அதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுத் தருவதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதியளித்திருக்கிறார்' என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இவற்றைப் பார்க்கும்போது, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகத்துக்குச் சாதகமாகச் செயல்படுகிறதோ? என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

Mekedatu Dam cannot be built without the approval of Tamil Nadu.. ramadoss

1892-ம் ஆண்டில் அன்றைய சென்னை மாகாணத்துக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, காவிரி உள்ளிட்ட, மாநிலங்களிடையே பாயும் எந்த ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதாக இருந்தாலும், அதற்குக் கடைமடை மாநிலமான தமிழகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒப்புதல் பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் எந்த அணையும் கட்டக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் உறுதி செய்துள்ளன. மத்திய அரசும் பல்வேறு தருணங்களில் இந்த நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது.

2015-ம் ஆண்டில் மக்களவை பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸுக்கு எழுதிய கடிதத்தில் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியும் இதை உறுதி செய்துள்ளார். அதன்பின், பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாத நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து, கர்நாடகமும், தமிழகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை எங்கு எழுந்தது? மேகதாது அணை விவகாரம் குறித்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் கூறியுள்ளனர். இவை அனைத்தும் கர்நாடகத்துக்கு ஆதரவான குரல்கள்தான்.

Mekedatu Dam cannot be built without the approval of Tamil Nadu.. ramadoss

1970-களில் காவிரி சிக்கல் குறித்து தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே நான்கு அணைகளைக் கர்நாடகம் கட்டியது. அதைத் தடுக்காமல், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அதேபோன்ற துரோகம் இப்போதும் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் மேகதாது அணை உட்பட காவிரி சிக்கல் தொடர்பாக, கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு, பேச்சுவார்த்தை நடத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது.

மேகதாது அணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் பெறாமல், மேகதாது அணையைக் கட்ட முடியாது என்பதுதான் சட்டப்படியான இன்றைய நிலையாகும். இதை கர்நாடகம் மீறாமல் பாதுகாக்க வேண்டியதுதான் மத்திய அரசின் கடமையாகும். மேகதாது அணை தொடர்பாக கர்நாடகம் எத்தனை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தாலும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லை என்றால், அவற்றை மத்திய அரசு ஆய்வு செய்யாமலேயே நிராகரிப்பதுதான் நீதியாகும். இதைத் தவிர பேச்சுவார்த்தை, ஆலோசனை என்ற எந்தப் பெயரில் இதுகுறித்த விவாதம் நடைபெற்றாலும் அது இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் நீர்த்துப் போகவே வழிவகுக்கும்.

Mekedatu Dam cannot be built without the approval of Tamil Nadu.. ramadoss

எனவே, மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் அளித்த தீர்ப்புகளையும், 1892ஆம் ஆண்டு ஒப்பந்தத்தையும் செயல்படுத்தும் அமைப்பாகவே மத்திய அரசு இருக்க வேண்டும். மாறாக, மேகதாது விவகாரத்தில், தமிழகத்தை பாதிக்கும் வகையில் கர்நாடகத்துக்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios