திமுக கூட்டணியில் இணைந்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மு.க.ஸ்டாலினால் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

 

இதையடுத்து இரண்டு கட்டங்களாக மதிமுக உடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த சூழலில் இன்று நடைபெற்ற 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட் வழங்கி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 

தமிழக சட்டமன்றத்தில் உள்ள திமுக எம்.எல்.ஏக்கள் கணக்கின்படி, அவர்களுக்கு 3 மாநிலங்களவை எம்.பி சீட்களில் வெற்றி பெற முடியும். இந்நிலையில் மதிமுகவிற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு மாநிலங்களவை சீட் மூலம், வைகோ மீண்டும் எம்.பியாக இருப்பதாக கூறப்படுகிறது. திமுக சார்பில் மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். 1996 வரை மாநிலங்களவை எம்பியாக இருந்த அவர் 1994ல் திமுகவில் இருந்து வெளியேறினார். பின்னர் மதிமுக என்ற கட்சி ஆரம்பித்து, 1998 - 2004 காலக்கட்டத்தில் மக்களவை எம்.பியாக இருந்தார். இதன்மூலம் 22 ஆண்டுகளுக்கு பின், வைகோ மீண்டும் மாநிலங்களவை எம்.பியாகயாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 

திமுகவில் இருந்த போது மாநிலங்களவை எம்பியாக இருந்த வைகோ, தற்போது திமுக கூட்டணியில் இணைந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை பெற்றுள்ளார். பார்லிமெண்ட் ஆப் டைகர் என ஒருகாலத்தில் புகழப்பட்ட வைகோவின் குரல் இனி மீண்டும் நாடாளுமன்றத்தில் ஒலிக்க உள்ளது.