ஈரோடு அருகே கடந்த 15-ம் தேதியன்று மாநாடு ஒன்றை நடத்தினார் வைகோ. பெரியார்-அண்ணா  பிறந்தநாள், வைகோ பொதுவாழ்விற்கு வந்த பொன்விழா, ம.தி.மு.க. வெள்ளி விழா என்று முப்பெரும் விழா மாநாடாக அமைந்தது. இந்த விழாவுக்காக ஸ்டாலினை அழைத்தார் வைகோ, ஆனால் அதே நாளில் விழுப்புரத்தில் தி.மு.க. சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவை சுட்டிக்காட்டி, துரைமுருகனை தன் சார்பாக அனுப்பி வைத்துவிட்டார் ஸ்டாலின். 

இதுதான் ம.தி.மு.க.வினரின் மனதை வெகுவாக பாதித்துவிட்டதாம். மாநாடு முடிந்த மறுநாள் வைகோவிடம் புலம்பி கொட்டியிருக்கிறார்கள் இப்படி... “அண்ணன் கலைஞரின் மகன், அண்ணன் கலைஞரின் மகன்! அப்படின்னு நீங்க தான் தலைவரே அவர் மேலே உருகி மருகுறீங்க. ஆனா ஸ்டாலின் உங்களுக்கு உரிய அங்கீகாரம் தர்றதில்லை. 

ஒவ்வொரு வருஷமும் அண்ணா பிறந்தநாளன்று நாம மாநாடு நடத்துறோம். அந்த கட்சி அப்படி பண்றதில்லை. ஆனா இந்த வாட்டி பண்றாங்கன்னா, உங்க பொன்விழாவுல கலந்துக்குறதை தவிர்க்குறதுக்காக நடத்துன வேலைதானே இது!? ஸ்டாலினுக்கு உண்மையிலேயே உங்க மேலே அன்பும், மரியாதையும் இருந்திருந்தா தங்களோட நிகழ்ச்சியை தள்ளிப்போட்டுட்டு, ஈரோடுக்கு வந்திருப்பார். 

அட அவ்வளவு கூட வேண்டாம், சென்னையில இருந்து கோயமுத்தூருக்கு விமானத்துல வந்திறங்கி, ஈரோடுக்கு கார்ல வந்து நம்ம முப்பெரும் விழாவுல காலையில கலந்துக்கிட்டு, சாலை மார்க்கமா சல்லுன்னு விழுப்புரம் போய் சேர்ந்திருக்கலாம் அவரு. புயலா சுத்துற அந்த மனிதருக்கு இது ஒரு பிரச்னையே இல்லை. பல நிகழ்வுகளை அவர் ரெகுலரா இப்படித்தான் கவர் பண்றார். 

ஆனால் நம்ம மாநாடுக்கு வரலேன்னா அதோட அடிப்படை, அவர் இன்னமும் உங்களை முழு மனசோடு ஏத்துக்கலை. அவரோடு கூட இருக்கிறவங்களும் உங்களை பற்றி தவறான அபிப்பிராயத்தை அவர்ட்ட தொடர்ந்து சொல்லிட்டே இருக்கிறாங்க. இதனால ஸ்டாலின் ரொம்பவே விலகுறார் உங்ககிட்ட இருந்து. 

போதும் தலைவரே! எங்களோட நன்மைக்காக, கட்சி தொடர் தோல்வி நிலையிலிருந்து மீளனும் அப்படின்னு நீங்க ஸ்டாலினிடம் கைகட்டி நிக்க வேணாம். தேர்தல் லாபத்துக்காக உங்களோட தன்மானத்துக்கு பிரச்னை வர்றதை எங்களாலே தாங்கிக்க முடியாது. வழக்கம்போல் தோற்கும் இடத்துலேயே இருப்போம்,  தப்பில்லை. மக்கள் விரும்பினால் நம்மை ஜெயிக்க வைக்கட்டும். 

தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைகிறோம்! ஸ்டாலினை முதல்வராக்குவோம்! அப்படின்னு நீங்க தொடர்ந்து முழங்குறதுக்கு எந்த அர்த்தமுமில்லாம ஆக்குறவங்களை நாம புறக்கணிப்போம்!” என்று சொல்லியிருக்கிறார்கள். வைகோ எந்த உணர்ச்சிக் கொந்தளிப்பையும் காட்டாமல், சின்ன புன்னகையை உதிர்த்துவிட்டு, தோள் துண்டை இறுகப்பற்றியபடி கார் ஏறினாராம்.
என்ன நடக்கப்போகிறதோ!?