பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக மதிமுக தொண்டர்கள் கல்வீசி தாக்கி கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிக்கு வருதை தர உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு ஒருமுறை தமிழகம் வரும் போதும் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வருகிறது. அதேபோல் தமிழகம் வரும்போது மோடிக்கு கருப்புகொடி காட்டுவதை வைகோ வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இந்நிலையில் அவரது வருகையை கண்டித்து கருப்புக்கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். அதன்படி அவர் தொண்டர்களுடன் நெல்லை, கன்னியாகுமரி எல்லையான காவல் கிணறு பகுதியில் திரண்டனர். மேலும் பிரதமர் மோடியை கண்டித்து எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி வந்தனர். பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வானில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டார். 

தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய வைகோ மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு செய்த துரோகங்கள் எவை என்று பட்டியலிட்டு ஆவேசமாக பேசினார். அப்போது தமிழகத்தை வஞ்சுக்கும் மோடியே திரும்பி போ என்று முழக்கமிட்டனர். 

கருப்புக்கொடி போராட்டத்தின் போது மதிமுகவினர் மீது பாஜகவினர் திடீரென கற்களை வீசியதால் பதற்றம் நிலவியது. ஒருபுறம் வைகோ தலைமையில் மதிமுகவினர் மற்றொரு புறம் பாஜகவினர் திரண்டனர். இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து தொண்டர்கள் மீது போலீசார் சிறிய தடியடி நடத்தி கலைத்தனர்.